இராமநாதபுரத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் ஆய்வு

Publish by: மகேந்திரன் --- Photo :


இராமநாதபுரம் மாவட்டம் , கடலாடி வட்டத்தில் , கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட கட்டுப்பாட்டு பகுதியான ( Contalnment Zone ) ஆப்பனூர் கிராமத்தில் , கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து , மாவட்ட ஆட்சித் தலைவர் திரு . கொ.வீரராகவராவ் ஆய்வு செய்தார்.

 

செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது . மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2,774 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது . அதில் 21 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது மேலும் 2 ,621 நபர்களுக்கு தொற்று இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மீதமுள்ள 132 நபர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது . வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையின் மூலமாகவும் , சிகிச்சை பெற்றவர்களின் முழு ஒத்துழைப்பின் காரணமாகவும் இதுவரை 11 பேர் பூரண குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் . மீதமுள்ள 10 நபர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு , அவர்களது உடல்நிலை சீராக உள்ளது.

 

தமிழக அரசின் உத்தரவின்பேரில் தற்போது இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது இதன் மூலம் 24 மணி நேரத்திலேயே கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.

 

மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 11 உள்ளாட்சி பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுற்றி சுமார் 5 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் மொத்தம் 15 கட்டுப்பாட்டு பகுதிகள் ( Containment zone ) ஏற்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன .

இப்பகுதிகளில் சுகாதாரத்துறை பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடாக பொதுமக்களுக்கு நோய் அறிகுறி குறித்து தொடர்ந்து 14 நாட்களுக்கு கள ஆய்வுப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்குத் தேவையான காய்கறி , பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது . மேலும் இப்பகுதிகளில் உள்ளாட்சித் துறையின் மூலம் தினந்தோறும் காலை மாலை என இரு வேளையில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன .

 

மேலும் , தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கில் சில அத்தியாவசிய பணிகளுக்கு தளர்வு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது .

 

இந்த ஆணையின் அடிப்படையில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் கடைகள் செயல்பட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது . இந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது . வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் ( Containment Zone ) எவ்வித தளர்வும் இல்லை , இதனை முழுமையாக கண்காணித்திட காவல்துறை , வருவாய் துறை மற்றும் பொது சுகாதாரத்துறை ர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .

 

144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை முற்றிலும் தவிர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார். முன்னதாக , முதுகுளத்தூர் வட்டம் , காக்கூர் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

 

இந்த நிகழ்வின்போது , பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.பி.இந்திரா , பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் தங்கவேலு , வட்டாட்சியர்கள் முத்துக்குமார் ( கடலாடி )முருகேசன் ( முதுகுளத்தூர் ) , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புக்கண்ணன் , பாண்டி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


Leave a Reply