முதலமைச்சரே உருவக்கேலி செய்திருப்பது பொறுப்பற்ற செயல் – பெ.சண்முகம்
காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் அளித்த பதிலுரையில் எந்தப் பதிலும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் குறிப்பிட்டு அதை ஊழல் எனக் கூறுவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
அவசர நிலைக் காலத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காவல்துறையினர் தாக்கியதில் அவர் பாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய சண்முகம், உருவக் கேலி செய்யும் விதமாகப் பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது என முதலமைச்சர் காட்டிய செய்கை தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான முதலமைச்சரின் பதிலுரையில் உறுப்பினர்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் எந்தப் பதிலும் இடம் பெறவில்லை எனவும் விமர்சித்துள்ளார். இதனிடையே எதிர்க்கட்சிகளின் குரலுக்கு செவி சாய்த்து அதற்கு உரிய முறையில் பதிலளிக்க வேண்டும் என்றும், சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., சுப்பராயன் தனது எக்ஸ் பதிவில், முதல்வர் பேசிய முறை, அவரது உடல் மொழி, தம்பி உனக்குத் தெரியுமா? என்று அவர் கேட்ட தோரணை, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஜனநாயகம் ஓடி ஒளிந்து கொண்டது எனக் குறிப்பிட்டுள்ளார். கையில் ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே என்றும், எதற்கு இந்த நாடக அரங்கேற்றம்? எனவும் விமர்சித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




