திருச்சியில் தேவேந்திர குல வேளாளர்கள் ஆர்ப்பாட்டம்..!
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை எஸ்.சி (SC) பட்டியலில் இருந்து விடுவித்து, மீண்டும் பி.சி (BC) பட்டியலில் இணைப்பதற்கு தமிழக அரசு மத்திய அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து தேவேந்திர குல வேளாளர்கள் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவிசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் 1936-ஆம் ஆண்டுக்கு முன்பு பிற்படுத்தப்பட்டோர் (BC) பட்டியலில்தான் இருந்தது. அதன் பிறகே எஸ்.சி பட்டியலுக்கு மாற்றப்பட்டது. எங்களை மீண்டும் பி.சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
எனவே, இந்த நியாயமான கோரிக்கை குறித்து தமிழக அரசு உடனடியாக மத்திய அரசுக்கு உரிய பரிந்துரையை அனுப்ப வேண்டும். அதன்பிறகு மீதமுள்ள பணிகளை நாங்கள் மத்திய அரசிடம் பேசிப் பார்த்துக் கொள்கிறோம். எங்களது கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால், வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளன்று, அனைத்து தேவேந்திர குல வேளாளர்களையும் ஒன்றிணைத்து தலைநகர் சென்னையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் எச்சரித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




