--- --:--:-- --

கோவையில் வலியால் தவித்த பெண் யானை..!

3

கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் இடது முன்னங்காலில் ஆழமாக இரும்புக் கம்பி சிக்கி வலியால் தவித்த சுமார் 25 வயது பெண் யானையை, வனத்துறையினர் மற்றும் சிறப்பு மருத்துவக் குழுவினர் ட்ரோன் மூலம் கண்காணித்து வெற்றிகரமாக மயக்க ஊசி செலுத்திப் புதுவாழ்வு அளித்துள்ளனர்.

 

 

கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சிறுமுகை வனச்சரகத்தைச் சேர்ந்த பெத்திக்குட்டை, உளியூர் காப்பக்காடு பகுதியில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி வனப் பணியாளர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சுற்றித் திரிந்த பெண் யானை ஒன்று நடக்க முடியாமல் தட்டுத்தடுமாறி மெதுவாகச் செல்வதைக் கண்டனர். உன்னிப்பாகக் கவனித்தபோது, யானையின் இடது முன்னங்காலில் தடிமனான இரும்புக் கம்பி ஆழமாக சிக்கிக் காயத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாகக் கோவை மாவட்ட வன அலுவலருக்கு (DFO) தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

 

காயமடைந்த யானைக்குத் துரிதமாகச் சிகிச்சை அளிக்க வனத்துறை உயர் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில், சிறுமுகை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர்கள், 60-க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய பிரம்மாண்ட மீட்புக் குழு களமிறக்கப்பட்டது. மேலும், யானைக்குப் பாதுகாப்பான முறையில் சிகிச்சையளிப்பதற்காக ஆனைமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்களைச் சேர்ந்த 5 அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர்கள், கும்கிகள் மற்றும் யானைப் பாகன்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

 

 

அடர்ந்த காட்டுக்குள் காயம் அடைந்த யானையின் நடமாட்டத்தைத் துல்லியமாகக் கண்டறிய நவீன ட்ரோன் கேமராக்கள் வான்வழியாகப் பயன்படுத்தப்பட்டன. யானையின் நகர்வுகளைத் தொடர்ந்து கண்காணித்த குழுவினர், சிகிச்சைக்கான சாதகமான சூழல் ஏற்பட்டதும் அடர்ந்த வனப்பகுதிக்குள்ளேயே வைத்து யானைக்கு லாவகமாக மயக்க ஊசி செலுத்தினர். மயக்க ஊசி செலுத்தப்பட்டு யானை நிலைகுலைந்து சாய்ந்ததும், கும்கிகளின் உதவியுடன் சுற்றிலும் பாதுகாப்பை ஏற்படுத்திய மருத்துவர்கள், யானையின் முன்னங்காலில் ஆழமாகப் பதிந்திருந்த இரும்புக் கம்பியைப் பத்திரமாக அகற்றினர். பின்னர் காயமடைந்த பகுதியில் கிருமிநாசினி திரவங்கள் தடவி, தீவிர நிவாரண மருந்துகளைச் செலுத்திச் சிகிச்சை அளித்தனர்.

 

 

சிகிச்சை நிறைவடைந்ததும், யானைக்கு மயக்கம் தெளிவிப்பதற்கான மாற்று மருந்து செலுத்தப்பட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பெண் யானை, ஆரோக்கியத்துடன் மீண்டும் வனப்பகுதிக்குள் நடந்து சென்றது. வனத்துறை மற்றும் மருத்துவக் குழுவினரின் இந்தத் துரிதமான மீட்பு நடவடிக்கையை வன உயிரின ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon