கோவை புறநகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை ” தாராளம் “. பெயரளவில் மட்டுமே செயல்படுவதாக அதிகாரிகள் மீது மக்கள் குற்றச்சாட்டு !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவை புறநகர் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று ” கல்லா ” கட்டும் வியாபாரிகள்.பெயரளவிற்கு மட்டுமே செயல்படுவதாக அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு.

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு ஹான்ஸ்,கணேஷ்,குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்தது.அதனையடுத்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் மொத்த விற்பனை கடைகள்,சில்லரை விற்பனை கடைகளில் சோதனையிட்டு பல லட்சக்கணக்கான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து,சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதமும் விதித்தனர்.

 

உணவுப்பாதுகாப்புத்துறையினரும்,காவல் துறையினரும் அவ்வப்போது சில்லரை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் அவ்வப்போது சோதனையிட்டு தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தும்,சம்பந்தவர்களுக்கு அபராதமும்,தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்தும் வருகின்றனர்.

 

இந்த நிலை தற்போது வரை தொடர்ந்து வருகிறது.ஆனால்,பெயரளவிற்கு மட்டுமே அதிகாரிகள் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.அதிகாரிகள் என்ன தான் கடைகளில் சோதனை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தாலும்,தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் வரத்து தொடந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.குடோன்களில் பதுக்கி வைத்து விற்பனை நடந்து வருவதும் மக்கள் அறிந்தே.

கோவை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், காரமடை,சிறுமுகை,பெரியநாயக்கன் பாளையம்,அன்னூர்,சூலூர்,கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி,ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்தவாறே உள்ளது.தொடர்ந்து சில்லரை மற்றும் மொத்த மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்து ” கல்லா ” கட்டி வருகின்றனர் வியாபாரிகள்.மேலும்,தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு ( அதாவது ஹான்ஸ் புகையிலை அதிகபட்ச விலை ரூ.5.தற்போதைய விலை ரூ.70 ) விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் பெயரளவிற்கே செயல் பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 

இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் ரோடு பகுதியில் மணியன் ஸ்டோர்ஸ் என்ற குடோன் இயங்கி வருகிறது.இந்த குடோனிலிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பாக்கெட்டுகள் அப்பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படுவதுடன், பல்வேறு இடங்களில் புழக்கத்தில் விடுவதாகவும், ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் பொள்ளாச்சி கிழக்கு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது குடோனில் ஒரு அறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதனையடுத்து அங்கிருந்து சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 70 கிலோ தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பேசிய அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்பே குடோன் உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் சோமனூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த வட மாநிலத்தவர் மூவரை கைது செய்த கருமத்தம்பட்டி போலீசார் சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.இதற்கும் முன்னரே புகையிலை பொருட்களை விற்பனை செய்த இருவரை கைது செய்து ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

 

கொரோனா வைரஸ் தாக்குதலால் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு காலத்தில் உணவுப் பாதுகாப்புத்துறையினரும், காவல் துறையினரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

சாட்டையை சுழற்றுவார்களா அதிகாரிகள் ? பொறுத்திருந்து பார்ப்போம்.


Leave a Reply