“கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதால் ஊரடங்கில் தளர்வு கிடையாது!!” டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் திட்டம்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ள நிலையில், ஊரடங்கில் தளர்வு செய்யப்படாது என அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.இந்தியாவில், மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்தபடியாக, நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாக உள்ளது. டெல்லியில் இதுவரை 1,893 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

 

இந்நிலையில் டெல்லியில் கொரோனா நிலவரம் தொடர்பாக கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் அதிவிரைவாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. ஆனாலும், கட்டுக்குள்ளேயே உள்ளதால் பயப்பட வேண்டியதில்லை. டெல்லியில் நேற்று 186 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் அறிகுறி இல்லாமலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. தங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது பற்றி அவர்கள் அறிந்திருக்க கூட இல்லை என்பது தான் அதிக வேதனை அளிப்பதாக உள்ளது.

 

எனவே டெல்லி மக்களை பாதுகாக்க ஊரடங்கை தொடர்வது அவசியமாகிறது. அதிகம் பாதிக்கப் பட்டுள்ள பகுதிகளுக்கு தளர்வுகள் கிடையாது. வரும் 27ந்தேதி கொரோனா தொடர்பாக மீண்டும் ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். அப்போது உள்ள நிலவரப்படி ஊரடங்கை தளர்த்துவது குறித்து உரிய முடிவெடுக்கப்படும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


Leave a Reply