கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை: குணமடைந்தோர் ரத்த தானம் செய்வீர்..! நவாஸ் கனி எம்.பி., வேண்டுகோள்!!

Publish by: மகேந்திரன் --- Photo :


கொரோனா நோய்த்தொற்றை குணப்படுத்த உதவும் பிளாஸ்மா சிகிச்சைக்கு, நோய்த்தொற்றை வென்று குணமடைந்தவர்கள் இரத்த தானம் செய்து உதவ வேண்டும் என ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நவாஸ்கனி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா நோய்த்தொற்றை பிளாஸ்மா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குணப்படுத்த, கேரளாவைத் தொடர்ந்து தமிழகமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்திடம் அனுமதி பெற்றுள்ளது.இது தொடர்பாக ராமநாதபுரம் மக்களவை எம்.பி., நவாஸ் கனி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

Covid-19 நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு,ஏற்கனவே குணமடைந்தவர்களின் இரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாவை பயன்படுத்தி சிகிச்சை அளிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்த கேரளா ஏற்கனவே அனுமதி பெற்றிருந்த நிலையில், தற்போது பல்வேறு மாநிலங்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்திடம் அனுமதி பெற்று வருகின்றனர்.

 

அதில் தற்போது தமிழகமும் அனுமதி பெற்றிருக்கிறது. எனவே, இதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வண்ணம், ஏற்கனவே நோய்த்தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று தங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியினால் முழுமையாக குணமடைந்தவர்கள்,இந்த சிகிச்சைக்காக இரத்ததானம் செய்து உதவிட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.

குறிப்பாக தமிழகத்தில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியவர்களில் அதிகமானோர் தப்லீக் ஜமாத்தை சார்ந்தவர்கள்.நீங்கள் அனைவரும் முன்வந்து இரத்த தானம் செய்து,நம் அனைத்து உறவுகளையும் இந்த நோய் தொற்றிலிருந்து மீட்டெடுக்க உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.கண்ணுக்கு தெரியா நோய் தொற்றுக்கு மதச் சாயம் பூசி, இஸ்லாமியர்கள் மீது அவதூறு பரப்பியவர்களுக்கு, மனிதநேயத்தின் மூலம் பதில் அளித்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

 

நோய் எதிர்ப்புச் சக்தியினால் முழுமையாக குணமடைந்தவர்கள்,இரத்த தானம் செய்வதன் மூலம் , அந்த இரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாவை பிரித்தெடுத்து நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.மேலும் ஒருவர் இரத்த தானம் செய்தால் ஐந்து நபர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இதற்கு தமிழக அரசு இரத்த தானம் செய்ய அழைக்கும்போது, அதற்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து, இரத்த தானம் அளித்து முழுமையாக நோய்தொற்று நீங்கிட பங்களிப்பு செய்ய வேண்டுமென்று நோய்த் தொற்றிலிருந்து மீண்டு வந்த அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

நீங்கள் மீண்டு வந்ததை போல,ஒட்டுமொத்த தமிழகமும் இந்த பேரிடரிலிருந்து மீண்டுவர ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும்.மனிதநேயத்திற்கு என்றுமே தமிழகம் முன்னுதாரணமாக திகழ்ந்திருக்கின்றது.,
பொதுநலத்துடன் இரத்தம் தானம் செய்ய முன்வந்து,மனிதநேயம் காக்க வேண்டும் என உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என நவாஸ் கனி எம்.பி., வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Leave a Reply