ரத்தம் சொட்ட சொட்ட போதை வெறிக்காக மதுவை திருடிய கும்பல்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தூத்துக்குடியில் போதை மாத்திரைகள் சாப்பிட்டும் போதை வெறி அடங்காததால் டாஸ்மாக்கில் புகுந்து மதுபானங்களை கொள்ளையடித்த 4 பேர் சிக்கியுள்ளனர். தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையில் காலி பாட்டில்கள் கிழித்து ரத்தம் சொட்டசொட்ட மதுபாட்டில்களை திருடிய 4 பேர் சிக்கியுள்ளனர். போதை வெறி அடங்காததால் திருடியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இவர்கள் சிக்கியது எப்படி?

 

தூத்துக்குடி மாநகரத்தின் முக்கிய சாலையான விஏ சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த மதுபான கடைக்கு மொத்தம் மூன்று வாசல்கள் உள்ளன. மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று வாசல்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மதுக் கடைக்கு வந்த ஆசாமி பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

 

அதனால் அருகில் உள்ள உயரமான கட்டடத்தின் வழியாக டாஸ்மாக் கடையின் மொட்டை மாடியில் இறங்கியுள்ளார். அங்கிருந்து கீழே வந்து பின் கதவை உடைத்து உயர் ரக மது பாட்டில்களை பெட்டி பெட்டியாக எடுத்துக்கொண்டார். மீண்டும் மாடி வழியாக தப்பி செல்ல முயன்ற போது கை தவறி மதுபான பெட்டிகள் கீழே விழுந்து உடைந்து உள்ளன. அவற்றின் மீது கொள்ளையன் எதிர்பாராதவிதமாக கால் வைத்ததால் கண்ணாடித் துண்டுகள் கிழித்து ரத்தம் சொட்டியுள்ளது.

 

அந்த காயங்களோடு மர்மநபர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு சுவர் ஏறி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் காலில் சமீபத்தில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் யாராவது சிகிச்சை பெற்றார்களா என விசாரித்தனர். அதில் 30 வயதான சார்லஸ், 33 வயதான அந்தோணி, 39 வயதான மைக்கேல் ராஜ், 30 வயதான பிரவீன் ஆகிய 4 பேர் சிக்கினர்.

 

மதுவுக்கு அடிமையான இவர்களால் ஊரடங்கு காலத்தில் மது இல்லாமல் இருக்க முடியவில்லை. அதனால் போதைக்காக தூத்துக்குடியில் உள்ள ஒரு மருந்து கடையில் போதை மாத்திரைகளை கேட்டுள்ளனர். கடைக்காரரும் இரண்டு விதமான மாத்திரைகளை கொடுத்துள்ளார். அவற்றை சாப்பிட்டும் போதை ஏறாததால் டாஸ்மாக்கிலிருந்து கொள்ளையடிக்க 4 பேரும் திட்டம் தீட்டினர்.

 

அதன்படி டாஸ்மாக்கில் மது பாட்டில்களை எடுத்து ஆசை தீர குடித்து போதை வெறியை தணித்துக் கொண்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் போதை மாத்திரை கொடுத்த மருந்தக உரிமையாளர் டேவிட் என்பவருக்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டாஸ்மாக்கில் கொள்ளையடித்த சார்லஸ் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.


Leave a Reply