144 தடை உத்தரவு; திருப்பூரில் 20 பேர் முன்னிலையில் எளிய முறையில் நடைபெற்ற இஸ்லாமிய திருமணம்!

Publish by: ஜாஸ்மின் நஷீர் தீன் --- Photo :


திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பர். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் எனக்கூறுவர். ஒரு திருமணம் என்றால் வெளிநாடுகளிலோ, வெளி ஊர்களிளோ இருக்கும் உறவினர்கள் ஒன்றுகூடி திருமணத்தை சிறப்பாக நடத்தி வைப்பர். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள கூட அச்சப்படுகின்றனர் மக்கள். காரணம் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியான கொரொனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது என்ற செய்திதான். இதனால் கொரொனா பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரம் பேர் மத்தியில் நடைபெறத் திட்டமிடப்பட்ட திருமணங்கள் அனைத்தும் வெறும் இருபது பேர் முன்னிலையில் மணமக்களின் வீடுகளிலோ, பூட்டப்பட்ட கோவில்களிலும் நடைபெற்றுவருகின்றன. இதனால் மணமக்கள் வீட்டார் சில சங்கடத்தை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்த வரிசையில் 29 ஆம் தேதி ஞாயிற்று கிழமையான இன்று திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் ஒரு திருமணம் நடைபெற்றது.

 

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அபூபக்கர்- பாத்திமா பீவி தம்பதியரின் மகனாக அப்பாஸ் என்ற மணமகனுக்கும், முகமது ஜியாவுதீன் – ரஹ்மத் நிஷா தம்பதியின் மகளான ரேஷ்மா என்ற பெண்ணுக்கும், ஜனவரி 15 ஆம் தேதி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நிச்சயம் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அதையடுத்து மார்ச் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மண்டபத்தில் திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான வேலைகளும் நடைபெற்றது. பத்திரிக்கைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. திருமண ஏற்பாட்டிற்கான மண்டபம் மற்றும் திருமண விருந்துக்கு முன்பணம் கொடுக்கப்பட்டது.

 

இந்நிலையில் திடீரென கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வந்த நிலையில் கொரொனா வைரஸ் இந்தியாவையும் தாக்கத் தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வெகு விமர்சையாக நடைபெற திட்டமிடப்பட்ட திருமணங்கள் அனைத்தும் எளிமையான முறையில் நடைபெற்றன.

 

இந்நிலையில் இன்று வெகு விமர்சையாக நடைபெற இருந்த மணமக்கள் அப்பாஸ், ரேஷ்மாவின் இஸ்லாமிய திருமணம் திருப்பூர் மாவட்டம் ,லக்ஷ்மி தியேட்டர் அருகே உள்ள சாமுண்டிபுரம் பகுதியில் அமைந்துள்ள மணமகள் ரேஷ்மாவின் வீட்டில் உறவினர்கள் 20 பேர் முன்னிலையில் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது.

 

காலை 10.30 மணிக்கு நடைபெறவிருந்த திருமணம் காலை 7.30 மணி அளவில் நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மணமக்களுக்கு வாட்ஸ்ஆப் மற்றும் தொலை பேசி மூலமாக  திருமண வாழ்த்துக்களை  தெரிவித்து வருகின்றனர்.


Leave a Reply