கொரோனா பீதியில் உலக நாடுகள்…! வட கொரியாவோ மீண்டும் ஏவுகணை சோதனை..! ஜப்பான், தென் கொரியா கண்டனம்!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangement


உலக நாடுகள் அத்துனையும் ஆட்கொல்லி கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் நிலையில், வடகொரியாவோ மீண்டும் இன்று ஏவுகணை சோதனை நடத்தி வீண் தம்பட்டம் அடித்துள்ள செயலுக்கு அண்டை நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளன.

 

இரும்புத் திரை நாடான வட கொரியா, உலக நாடுகளின் எந்த சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்படாமல் அணு ஆயுதங்களை ஏராளமாக குவித்து வருகிறது. இதனால் அந்த நாடு மீது ஏராளமான பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் விதித்து வந்தாலும் அந்நாட்டு அதிபரும் சர்வாதிகாரியுமான கிம் ஜோங் உன் மசிவதாகத் தெரிவதில்லை.

 

இதனால் வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதே பெரும் ரகசியமாகவே உள்ளது. எந்நேரமும் தன் அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பானை அணு ஆயுதங்களைக் காட்டி மிரட்டுவதே வடகொரியாவுக்கு வாடிக்கையாக இருந்து வருகிறது.

 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் 3 மாதங்களாக சீனா சின்னாபின்னமாகிக் கிடந்த போதும், அதன் எல்லைப்புறத்தில் உள்ள வடகொரியாவோ எந்த சலனமும் இன்றி காணப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் சீனாவைச் சுற்றிலும் உள்ள நாடுகளை மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றையும் உலுக்கி வருகிறது.

 

இதனால் வடகொரியாவிலும் வைரஸ் பாதிப்பு இல்லாமலா இருக்கும் என உலக நாடுகள் மட்டுமின்றி, ஐ.நா.சபையின் உலக சுகாதார அமைப்பும் உற்று நோக்கியது. ஆனால் எந்த தகவலையும் வடகொரியா கசிய விடவில்லை. தம் நாட்டில் எந்தப் பாதிப்பும் இல்லை என்பது போலவே வெளிக்காட்டி வந்த வடகொரியா, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு திடீரென வாண வேடிக்கை காட்டுவது போல இரு ஏவுகணை சோதனைகளை நடத்தி அண்டை நாடுகளை அச்சப்பட வைத்தது.

 

இப்போதோ கொரோனா வைரசின் தாக்கம் உலக நாடுகள் பலவற்றையும் அச்சத்திலும், பீதியிலும் உறையச் செய்துள்ளது. இதனால் ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிரியா போர், இஸ்ரேல் -பாலஸ்தீன மோதல், ஈரான் – அமெரிக்கா இடையிலான வளைகுடா பதற்றம் போன்றவை எல்லாம் காணாமல் போய், அனைத்து நாடுகளுமே கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரசுக்கு எதிரான போரில் கவனம் செலுத்தி வருகின்றன.

 

இந்நிலையில், வட கொரியாவோ இன்று மீண்டும் இரு அணு ஆயுத ஏவுகணைகளை சோதித்துப் பார்த்து கொரோனா பீதியில் உள்ள அண்டை எதிரி நாடுகளான தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளை பெரும் பீதியடையச் செய்துள்ளது. உலக நாடுகள் கொரோனாவை வைரசால் மோசமான உயிரிழப்புகளை சந்தித்து அச்சத்தில் உள்ள நிலையில், வடகொரியாவின் செயல் முற்றிலும் அநாகரீகம் என்றும், இது
சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தல் எனவும் ஜப்பான், தென் கொரியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


Leave a Reply