ஊரடங்கு உத்தரவால் முடங்கியுள்ள மக்கள்..! கடன், கட்டணங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்க வேண்டும்..! நவாஸ் கனி எம்.பி. வேண்டுகோள்!!
கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் வங்கிக் கடன், நகைக்கடன் மற்றும் மாதாந்திர கட்டணங்கள் செலுத்த கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி எம்பி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் சூழ்நிலையில் , வருமான வரியை தாமதமாக கட்டிக்கொள்ள மத்திய அரசு சலுகை அளித்துள்ளது.
இது போல, பொதுமக்கள் சிரமப்படாத வண்ணம், அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாதாந்திர தவணைகளான வியாபார கடன், நகை கடன், விவசாய கடன், வாகனக் கடன் உள்ளிட்ட வங்கிக் கடன்களுக்கு மூன்று மாத காலம் அவகாசம் வழங்கி சலுகை பிறப்பிக்க வேண்டும்.
அதேபோன்று மின் கட்டணம், தொலைபேசி கட்டணம் உள்ளிட்ட இதர மாதாந்திர கட்டணங்களுக்கும் மூன்று மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும். அரசு வங்கிகள், துறைகள் மட்டுமல்லாது தனியார் வங்கிகள், தனியார் துறைகளுக்கும் இது குறித்து ஆணை பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவை மக்கள் முழுமையாக பின்பற்ற அரசு இதுபோன்ற சலுகைகளை அறிவித்தால் மக்கள் எதிர்கால அச்ச உணர்வின்றி முழுமையாக ஒத்துழைக்க ஏதுவாக அமையும்.
எனவே இந்த ஊரடங்கு உத்தரவினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் இதுபோன்ற சலுகைகளை அளிக்க அரசு முன் வர வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். நவாஸ்கனி எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.






