“கொரோனாவை விட பட்டினி பாதிப்பு அதிகமாகும் அபாயம்!!” சிறு தொழில் செய்பவன், அணிசேரா தொழிலாளி எப்படி பசியாறுவான்..? கமல் எழுப்பும் கேள்வி!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangement


ஊரடங்கு உத்தரவால் இந்தியாவில் கொரோனா தொற்றை விட பசி, பட்டினியால் பெரும்பானோர் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயம் உள்ளதாக பலரும் எச்சரிக்கை விடத் தொடங்கியுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமலஹாசனும், இந்திய நிதி நிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே என்றும், அணிசேரா தொழிலாளர்கள் எப்படி பசியாறுவர் என்பதை கவனத்தில் கொள்ளாமல் உதாசீனித்தால் ஆட்சியில் இருப்போர் பதவி இழப்பர்..இது சரித்திரம்.. என கடுமையாக சாடியுள்ளார்.

 

உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி, குலை நடுங்கச் செய்துள்ள கொரோனா எனும் கொடிய வைரஸ் இந்தியாவிலும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வல்லரசு நாடுகளையே கிடுகிடுக்கவும், நடுங்கவும் செய்துள்ள இந்த வைரஸ் தொற்றை சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றன. இதனால் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் ஜப்பான்,மலேசியா, சிங்கப்பூர் என முன்னேறிய பல நாடுகளும், மக்களை வெளியே நடமாடச் செய்யாமல் வீடுகளுக்குள் முடக்கியுள்ளன.

அந்த நாடுகள் அனைத்தையும் தம் நாட்டு மக்களின் உயிர் மேல் இருக்கும் அக்கறையுடன், கூடுதல் அக்கறையாக அவர்களின் அன்றாட வாழ்வாதரத்திற்கு தேவையான அனைத்தையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளன. பயப்படாதீர்கள் உங்களை அரசு காப்பாற்றும் என்று தெரிவித்து, பில்லியன், டிரில்லியன் என்ற கணக்கில் லட்சக்கணக்கான கோடிகளை ஒதுக்கியுள்ளன.

 

இந்தியாவிலும் இப்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஒரே வழி மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்குவது தான் ; யாரும் வெளியில் நடமாடக் கூடாது என 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுவிட்டது. பொருளாதாரத்தை விட ஒவ்வொரு குடிமகனின் உயிர் தான் முக்கியம்.

 

எனவே இப்போதைக்கு எவ்வளவு பாதிப்பு இருந்தாலும் இந்த கடுமையான முன்னெச்சரிக்கை தேவையான ஒன்று என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று கைகூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இப்படி திடீரென 21 நாட்களுக்கு ஒட்டு மொத்தமாக அனைவரும் முடங்க வேண்டும் என்ற ஊரடங்கு உத்தரவு என்பது இந்திய மக்கள் இதுவரை சந்தித்திராதது. எதிர்பார்த்திருக்கவும் மாட்டார்கள். உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோைாவுக்கு எதிரான போர் போன்ற இந்த சூழலில், முன்னெச்சரிக்கையாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தேவையான, அவசியமான ஒன்று தான்; இதில் ஒட்டுமொத்த மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் ஒப்புதல் தான்.

ஆனால், 130 கோடி மக்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், அனைவரின் வாழ்வாதாரத்திற்கும் மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதம் கொடுத்துள்ளதா? அவர்களின் பசி, பட்டினியை போக்க என்ன தீர்வை அரசுகள் வைத்துள்ளன என்பது தான் இப்போது சமூக அக்கறையுள்ள பலரின் கேள்வியாக உள்ளது.

 

ஏனெனில் இந்தியாவில் அனைவருக்கும் பணிப் பாதுகாப்பு என்பது அறவே கிடையாது. வேலை உத்தரவாதம் என்பதும் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு மட்டுமே.பெரும் பகுதி மக்கள் முறைசாரா தொழிலாளர்கள் எனும் அன்றாட வேலைகளுக்கு சென்று தினசரி வருவாய் ஈட்டுவோர், விவசாயிகள், ஆட்டோ, வாகனம் ஓட்டுவோர், நடைபாதைகளில் வியாபாரம் செய்வோர், சுயதொழில் செய்வோர், சிறுதொழில் செய்வோர் தான்.

 

இதில் பாதிக்கு மேற்பட்டோர் அன்றாடம் வருவாய் ஈட்டினால் மட்டுமே தங்கள் குடும்பத்தில் அடுப் பெரிக்க முடியும்; பிற செலவுகளை ஈடுசெய்ய முடியும் என்ற நிலையில் உள்ளவர்கள் தான்.

 

இந்த நிலையில் இந்திய மக்களின் வாழ்வாதாரச் சூழல் உள்ள நிலையில்,பிற நாடுகளைப் பின்பற்றி கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு சட்டத்தை போட்டு கெடுபிடி காட்டினால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.பிரிட்டன், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் என இப்படி கடுமையான சட்டங்களை போட்டுள்ள நாடுகள் அனைத்தும் தன் நாட்டு மக்களிடம், வாழ்வாதாரம் பற்றி பயப்படாதீர்கள்;அனைத்தையும் அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என கூடுதலாக தெம்பு கொடுக்கின்றன. அதனை நடைமுறை சாத்தியமாக்குகின்றன.

 

இதனால் தம் நாட்டு அரசாங்கத்தின் மீது மக்களும் பெரும் நம்பிக்கை வைக்கின்றனர். அதனால் அரசாங்கம் போடும் சட்டத்தை மதிக்கின்றனர். அது போன்ற உத்தரவாதத்தை கொடுக்காமல் திடீரென 21 நாட்களுக்கு ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்து வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாடு விதித்தது தான் பெரும்பாலான ஏழை , எளிய அன்றாட வருவாய் ஈட்டுவோரை அல்லாட வைத்துள்ளது எனலாம்.

 

தமிழக அரசு, பாதிக்கப்படுவோர் யார்? என்றெல்லாம் பாராமல் அனைவருக்கும் ரூ.1000 ஆயிரம் பணம் மற்றும் ஒரு மாத ரேசன் பொருள் இலவசம் என நிவாரணத்தை அளித்துள்ளது. நடை பாதை வியாபாரிகள், முறைசாரா தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கூடுதலாக ரூ.1000 என அறிவித்துள்ளன.

இவர்களை எப்படி கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கப் போகிநார்களோ? இதனால் எவ்வளவு பேர் பயனடையப் போகிறார்களோ? என்பதெல்லாம் புரியாத புதிர். ஆனால் உண்மையான வாழ்வாதார பாதிப்புக்கு ஆளாவோர் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பகுதியினர் அடங்குகின்றனர். இவர்களெல்லாமே இப்போது கொரோனா பீதியை விட, தங்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்றப் போவது எப்படி? என்ற அச்சத்தில் நிர்கதியாகி நிற்கின்றனர்.

 

இதனால் இவர்களின் அச்சத்தை போக்க வேண்டியதும் அரசின் கடமையாக உள்ளது. இல்லையேல் தற்போதைய ஊரடங்கு 21 நாள் என்றாலும், மேலும் நீடிக்குமோ என்ற பீதியில், நாட்டில் பசி, பட்டினி பாதிப்பு என்பது கொரோனா பாதிப்பைச் காட்டிலும் முன்கூட்டியே பெரும் பிரச்னையாக உருவெடுக்கும் என சமூக ஆர்வலர்கள் பலரும் அபாய எச்சரிக்கை விடுக்கின்றனர்.

 

இதைத் தான் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமலஹாசனும் சமூக அக்கறையுடன் நாட்டு மக்களை உதாசீனித்தவர் பதவி இழப்பர்; இது சரித்திரம் என்று சாட்டையடியாக விமர்சித்துள்ளார்.

 

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது பற்றி டுவிட்டரில் கமலஹாசன் பதிவிட்டுள்ளதாவது: உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்கச் சொல்லும் நேரத்தில், அணி சேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர்.. இது சரித்திரம்.. என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.


Leave a Reply