“ஊரடங்கால் முடங்கியது இந்தியா!!” கடுமையாக அமல்படுத்த உத்தரவு..! தமிழகத்தில் போலீஸ் கெடுபிடி!!
கொரோனாவுக்கு எதிரான போர் காரணமாக பிரதமர் மோடியின் உத்தவுப்படி நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஒட்டு மொத்த தேசமே முடங்கியுள்ளது. ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் மக்கள் வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்த போலீசார் பெரும் கெடுபிடி காட்டுகின்றனர்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு, உலகளாவில் பலியானோரின் எண்ணிக்கை 18,907 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்குற்கும் மேலானோர் பலியான நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை விர்ரென உயர்ந்து வருகிறது. இத்தாலியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 743 பேர் உயிரிழக்க, அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 6820 ஆக அதிகரித்துள்ளது. இதே போன்று ஸ்பெயின் ( 2991), ஈரான் (1934), பிரான்ஸ் (1100) அமெரிக்கா (782) ஆகிய நாடுகளும் உயிரிழப்பு அதிகமாகி, வைரஸ் தொற்று பாதிப்பும் அந்த நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
உலக அளவில் இந்த வைரஸ் தொற்று 197 நாடுகளுக்கு பரவி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரம் ஆகியுள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கூடி, இதுவரை 563 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையும் 12 ஆக உயர்ந்துள்ளது.

இதில் தமிழகத்தில் மதுரையைச் சேர்ந்த 54 வயது நபர் நேற்றிரவு உயிரிழந்தார். இவர் வெளிநாடோ, வெளி மாநிலங்களுக்கோ பயணிக்காத நிலையில், சமூக ரீதியில் கொரோனா பாதிப்புக்கு ஆளான முதல் நபர் என்பது தெரிய வந்தது. ஆனால், இவர் பெருந்துறையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வரும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த 2 பேருடன் கடந்த 9-ந் தேதி சந்திப்பு நடத்தியதும், அவர்கள் மூலம் கொரோணா தொற்று பரவியதும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, தற்போது நாட்டில் 2-வது ஸ்டேஜில் உள்ள தொற்று, சமூகங்களுக்கு இடையே பரவும் 3-வது ஸ்டேஜுக்கு செல்லவிடாமல் தடுக்க வேண்டியது மிக மிக அவசியம் என்பதால் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. இதன்படி நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், நாடு முழுவதும் கடுமையாக பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் நாடெங்கும் மக்கள் வீடுகளுக்குள் முடங்க, சாலைகள் தெருக்கள் வெறிச் சோடிக் கிடக்கின்றன. அத்தியாவசியப் பணிகளுக்கான வாகனங்கள் மட்டுமே சாலைகளில் அனுமதிக்கப்படுகின்றன. இரு சக்கர வாகனங்களில் அனாவசியமாக சுற்றுபவர்களை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்புகின்றனர். காய்கறிகள், மளிகை சாமான்கள் வாங்க மக்கள் அதிகமாக கூடியதால், மதுரை மாட்டுத்தாவணி, ஒட்டன்சத்திரம், திருச்சி என தமிழகத்தில் உள்ள பெரிய காய்கறிச் சந்தைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சிறு, சிறு காய்கறி வியாபாரிகளிடமும் போலீசார் கண்டிப்பு காட்டி வருகின்றனர்.
இதனால், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மக்கள் அல்லாடுவதைத் தவிர்க்க, அரசு முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஊரடங்கின் முதல் நாளிலேயே எழத் தொடங்கியுள்ளது.






