சட்டப் பேரவை வந்த எம்எல்ஏக்களுக்கு கொரானா சோதனை..! பார்வையாளர்களுக்கும் இன்று முதல் அனுமதி இல்லை!!

கொரானா அச்சுறுத்தல் காரணமாக தமிழக சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு இன்று முதல் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டப் பேரவைக்கு வந்த எம்எல்ஏக்களுக்கும் கொரானா சோதனை நடத்தப்பட்டது.

 

உலகையே பீதிக்கு ஆளாகியுள்ளது கொரானா வைரஸ். இதனால் முக்கிய நிகழ்ச்சிகள், பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தியேட்டர்கள், பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் என மக்கள் கூடும் இடங்களும் மூடப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் தமிழகத்திலும் கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இன்று தமிழக சட்டப்பேரவைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் , துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் மட்டுமின்றி ஆளும் அதிமுக எம்எல்ஏக்கள் பலருக்கும் கொரானா சோதனை நடத்தப்பட்ட பின்னரே பேரவையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

சட்டப்பேரவையில் இன்று கொரானா குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், கொரானா அச்சுறுத்தல் காரணமாக கர்நாடகா, தெலுங்கானா சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அது போல் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரையும் முன் கூட்டியே ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்ற அறிவிப்பை சபாநாயகர் ப.தனபால் வெளியிட்டார். மறு அறிவிப்பு வரை இந்த உத்தரவு தற்காலிகமாக அமல்படுத்தப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.

 


Leave a Reply