--- --:--:-- --

வேலை மோசடி வழக்கு: செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

5

வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை நகலை வழங்கியது. கடந்த 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரை, போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குப் பணம் பெற்றுக் கொண்டு நியமனம் செய்ததாக, சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2 ஆயிரத்து 202 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் சுமார் 25 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

 

 

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி என். லோகேஸ்வரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகினார். பின்னர், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜி உள்ளிட்ட முதல் 50 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல், பென் டிரைவில் வழங்கப்பட்டன.

 

அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், குற்றப்பத்திரிகை நகல்களைக் காகித வடிவில் வழங்க வேண்டும் எனவும், தற்போது விசாரணை நடைபெறும் நீதிமன்ற அறை குறுகியதாக இருப்பதால், அடுத்தமுறை விசாரணையை நேரு ஸ்டேடியம் அல்லது தீவுத்திடல் போன்ற நெருக்கடியில்லாத இடங்களில் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அப்போது அரசுத் தரப்பில், விசாரணையை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்துப் பரிசீலித்து முடிவெடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

 

 

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 51-ஆவது நபர் முதல் 100-வது நபர்கள் வரை குற்றப்பத்திரிகை வழங்குவதற்காக, விசாரணையை நவ. 11-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon