ஆவின் அலுவலர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் விஜயலஷ்மி முக்கிய உத்தரவு!
தீபாவளி பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் தேவைக்கேற்ப தரமான ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள், சிறப்பு இனிப்பு வகைகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலஷ்மி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலஷ்மி தீபாவளி பண்டிகை – 2026-ஐ முன்னிட்டு, இன்று (05.11.2026) அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, தீபாவளி பண்டிகைக்காக ஆவின் சார்பில் தயாரிக்கப்படும் சிறப்பு இனிப்பு வகைகளின் உற்பத்திப் பணிகளைப் பார்வையிட்டு, இனிப்புகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். மேலும், தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளைப் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் விநியோகிக்கும் முறைகள், ஆவின் பாலகங்களில் இனிப்பு வகைகளின் இருப்பு ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
தீபாவளி பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் தேவைக்கேற்ப தரமான ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள், சிறப்பு இனிப்பு வகைகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் இணை மேலாண்மை இயக்குனர் திருமதி சு.அனிதா, பொது மேலாளர்கள், உதவி பொது மேலாளர்கள், அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





