தமிழ்நாட்டில் இனி ஹைட்ரோகார்பன் திட்டங்களை அமல்படுத்த வாய்ப்பே இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் மீண்டும் உறுதியளித்துள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மாநில அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன என்றும் அனைத்தையும் ஆராய்ந்து சட்டம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது குறிப்பிட்டு பேசிய முதல்வர் சென்னை, வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப்பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கலில் இந்த திட்டத்தில் தாமதத்திற்கு காரணம் என்றும் அவர் விளக்கமளித்தார்.
மேலும், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 14 வகையான நெகிழிப் பொருட்களை ஒழிப்பதற்கு வணிகர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார். மலைவாழ் மக்களுக்கு எளிதாக மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நீலகிரியில் மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அங்கு வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் பதில் புதிதாக 10 மரக்கன்றுகள் நடப்படும் என்றும் முதலமைச்சர் விளக்கமளித்தார்.