முதல்வர் எடப்பாடியின் “விவசாயி வேஷம்” சூப்பர் ஒர்க் அவுட்..! வயலில் இறங்கி நாற்று நட்டு அசத்தல்!!

ஏகப்பட்ட போலீஸ் மற்றும் கட்சியினருடன் ஊர்வலம் போல் ஏ.சி.காரில் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வயல்களில் பெண்கள் நாற்று நடுவதைக் கண்டு திடீரென்று காரில் இருந்து இறங்கினார்.

 

வெள்ளைவெளேர் வேட்டியை மடித்துக்கட்டி பெண்களுடன் சேர்ந்து தானும் சிறிது நேரம் நாற்று நட்டு, தானும் விவசாயி தான் எனக் கூறி அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்க வைத்த சம்பவம் நாகை அருகே இன்று அரங்கேறியது.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமீப காலமாக தானும் விவசாயி தான் என்பதை நிரூபிக்கும்படியான உருப்படியான சில காரியங்களை செய்து வருகிறார். கழுத்தில் பச்சை துண்டு அணிந்து அல்லது தலையில் பச்சைத் துண்டை கட்டியபடி முதல்வர் எடப்பாடி போட்டு வரும் இந்த விவசாயி வேஷம் ஒர்க் அவுட் ஆகி அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தருகிறது என்றே கூறலாம்.

டெல்டாப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது, சேலம் அருகே பல நூறு கோடி கால்நடைப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டியது, மேட்டூர் அணையைச் சுற்றியுள்ள 100 குளங்களுக்கு பாசன நீர் கொண்டு செல்லும் சரபங்கா திட்டம் போன்ற விவசாய திட்டங்களை அறிவித்து, தான் விவசாயி, விவசாயிகளின் நண்பன் என்பதை வெளிப்படுத்தி வருகிறார்.

 

மேலும் சொந்த ஊரான எடப்பாடிக்கு செல்லும்போது, தனது சொந்த வயலில் விவசாய பணிகளை செய்யும் படங்களை வெளியிடச் செய்தும் எடப்பாடியார் சபாஷ் பெற்று வருகிறார். இந்த விவசாயி வேஷமும் அவருக்கு நன்கு ஒர்க் ஆகி விட்டதால், செல்லும் இடமெல்லாம் தாம் ஒரு விவசாயி என்பதை சுட்டிக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

 

அதுபோல், இன்று நாகையில் புதிதாக கட்டப்பட உள்ள மாவட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழாவுக்காக முதல்வர் எடப்பாடி காரில் பயணித்துக் கொண்டிருந்தார். உடன் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், பாதுகாப்பு போலீசார் என ஏகப்பட்ட கார்கள் அணிவகுத்துச் சென்றன.

 

நீடாமங்கலம்அருகே கொண்டையாறு என்ற கிராமத்தில் அழகிய வயல்கள் ஓரம் கார்கள் சென்று கொண்டிருந்தன. அங்கு ஒரு வயலில் பெண்கள் மும்முரமாக நடவுப் பணிகளில் ஈடுபட் டிருந்தனர். இதைக் கண்ட முதல்வர் எடப்பாடி திடீரென காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார்.

உடனே முதல்வர் எடப்பாடி குஷியாக விவசாயி எடப்பாடியாக மாறினார். வேட்டியை மடித்துக்கட்டியவர், தோளில் பச்சைத் துண்டுடன் வயல் சோற்றில் இறங்கிய விவசாயி எடப்பாடி பெண்களுடன் சேர்ந்து தானும் நாற்றுக்களை விறுவிறுவென நடத் தொடங்கினார். இதைக் கண்ட உடன் வந்த அமைச்சர்கள் காமராஜ், வெல்லமண்டி நடராஜன் போன்றோரும் திகைத்துப் போய் வேறு வழியின்றி லேட்டியை மடித்துக்கட்டி சேற்றில் கால் வைத்தார்.

 

இப்படி சிறிது நேரம் பெண்களுடன் பேசியபடியே எடப்பாடி பழனிசாமி நாற்று நட்டதுடன், விவசாயம் தொடர்பான சில டிப்ஸ்களையும் வழங்கினார். தங்களுடன் முதல்வர் எடப்பாடியும் நாற்று நடுவதைக் கண்ட பெண்கள் மகிழ்ச்சியில் பூரித்துப் போயினர்.

 

ஆகாமுதல்வர் எடப்பாடி போடும் இந்த விவசாயி வேஷமும், விவசாயிகளின் நண்பன் கோஷமும் வர்ற தேர்தல்ல விவசாயிகளின் ஓட்டை நம்ம கட்சிக்கு கணிசமாக பெற்றுத் தந்துவிடும் போலவே? என அதிமுகவினரும் புளகங்கிதம் அடைந்து விட்டனர் என்றே கூறலாம்.


Leave a Reply