--- --:--:-- --

கோவையில் இந்து முன்னணி மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் போட்டி பந்த்! வர்த்தக நிறுவனங்கள்,வணிக வளாகங்கள் ” வெறிச் “!

cgnv

இந்து முன்னணியின் கோவை மாவட்டச் செயலாளர் ஆனந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் கோவையில் தாக்கப்பட்டார். இதனையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் கோவையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

இதேபோல் கோவை கணபதி வேதம் பால் நகரிலுள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் ஆட்டோ டிரைவர் முகமது கனி தாக்கப்பட்டதை கண்டித்தும் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் கோவையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

இதனால் எப்பொழுது பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் காந்திபுரம்,சிங்காநல்லூர்,உக்கடம் பேருந்து நிலையங்கள்,உக்கடம் மீன் மார்க்கெட்,காந்திபுரம் 100 அடி சாலை,கிராஸ்கட் ரோடு,டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் வர்த்தக நிறுவனங்கள்,வணிக வளாகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.அரசுப்பேருந்துகள்,ஒரு சில தனியார் பேருந்துகள்,ஆட்டோக்கள் இயங்குவதால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

இதே போல் கோவையின் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், அன்னூர்,கருமத்தம்பட்டி,சோமனூர்,சூலூர்,பொள்ளாச்சி,வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

 

இந்து முன்னணி மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் கடையடைப்பு போராட்டத்தை அடுத்து அசம்பாவித சம்பவங்கள் நிகழா வண்ணம் கோவை மாநகர கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.மேலும்,முக்கிய வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தமிழ்நாடு காவல்துறை கூடுதல் டி.ஜி.பி.க்கள் ஜெய்ஹிந்த் முரளி, சங்கர் ஜிவால், ஆகியோர் இரண்டு நாட்களாக கோவையில் முகாமிட்டு அசம்பாவித சம்பவங்களை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்து முன்னணி மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் கடையடைப்பு போராட்டம் கோவையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon