பிரதமர் மோடியுடன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு..! வன்முறைக்கு காரணமானவர்களை தண்டிக்க வலியுறுத்தல்!!
பிரதமர் மோடியை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் கலவரத்துக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பாராமல் தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற பின், பிரதமர் மோடியை அரவிந்த் கெஜ்ரிவால் முதன் முறையாக இன்று சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இன்று காலை நடைபெற்றது. அப்போது டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது தொடர்பாக இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.
பிரதமருடனான சந்திப்பு முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், டெல்லி வன்முறைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என பிரதமரை வலியுறுத்தியதாக தெரிவித்தார்.மேலும் உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலை மத்திய அரசுடன் இணைந்து டெல்லி அரசு செயல்படுவது குறித்து விவாதித்ததாகவும் கெஜ்ரிவால் கூறினார்.
டெல்லியில் கடந்த வாரம் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற வன்முறை, தீ வைப்பு சம்பவங்களால் பெரும் கொந்தளிப்பான சூழல் உருவானது. இந்த கலவரத்தில் பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ள நிலையில், கடந்த 5 நாட்களாக மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது.இந்நிலையில் இந்தக் கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரிடம் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




