இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து..! குற்றப்பிரிவு போலீஸ் முன் நடிகர் கமல்ஹாசன் ஆஜர் !!

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியானது தொடர்பான வழக்கில், குற்றப்பிரிவு போலீஸில் நடிகர் கமல்ஹாசன் விசாரணைக்கு ஆஜரானார்.

 

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள ஒரு தனியார் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. கடந்த 19-ந் தேதி படப்பிடிப்பின்போது ராட்சத கிரேன் ஒன்று சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

 

இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நடிகர் கமல், இயக்குனர் சங்கர் நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்ட பலரும் மயிரிழையில் உயிர்தப்பினர். திரையுலகை பெரும் அதிர்ச்சிWல் ஏற்படுத்திய இந்த விபத்து தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் மற்றும் கிரேன் உரிமையாளர், கிரேன் ஆபரேட்டர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, விபத்து நிகழ்ந்த சம்பவ இடத்தில் இருந்த நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து சம்மன் அனுப்பியிருந்தனர்.

 

அதன்படி இயக்குநர் சங்கர், கடந்த 27-ந் தேதி குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி பதிலளித்தார். இந்நிலையில் இன்று ஆஜராகுமாறு நடிகர் கமலுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் கமல் ஆஜரானார். அவரிடம் விபத்து தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு அதற்கு கமல் பதிலளித்ததாக கூறப்படுகிறது.


Leave a Reply