அரசுக்காகவே காவல்துறை செயல்பட வேண்டும்!
காவல்துறையினர் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாகச் செயல்படக் கூடாது என்றும், நிரந்தரமான அரசுக்குச் சேவையாற்ற வேண்டுமே தவிர, மாறிக்கொண்டிருக்கும் ஆளுங்கட்சிக்காகச் செயல்படக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்ட திமுக பெண் கவுன்சிலர் டி. சுதாவின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி என். ரமேஷ் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சியை விமர்சிப்பவர்கள் அல்லது அவதூறாகப் பேசுபவர்கள் மீது காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்யும் நிலையில், ஆளுங்கட்சியினருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அளிக்கும் புகார்கள் மீது அதே வேகத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் ஆகிய இரு தரப்பினரிடமும் காவல்துறை ஒரே மாதிரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அதுவே காவல்துறையின் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்புக்கு அடிப்படையானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், “காவல்துறையின் தரத்தை மதிப்பிடுவது என்பது ஊடகங்கள் முன்னிலையில் பிரபலமானவர்களிடம் அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதில் இல்லை. யாரும் கவனிக்காத நேரத்தில் சாதாரண மக்களிடம் அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதில்தான் உள்ளது” என்றும் நீதிபதி தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





