தனுஷ் நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!
திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் தனுஷின் ‘தனுஷ் நற்பணி இயக்கம்’, தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேரடி அரசியல் பிரவேசத்திற்கு முன்பாகத் தனது பலத்தைச் சோதித்து அறியவும், அடிமட்ட அளவில் நிர்வாகிகளை அடையாளம் காணவும் இந்த முடிவை இயக்கம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்து கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்து தனுஷ் உரையாடியாது, சென்னையில் நடைபெற்ற மகளிர் அணி சந்திப்பு ஆகியவை தனுஷின் அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் விஷயங்களாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், வரும் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சித் தேர்தலில், தனுஷ் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் சுயேச்சை வேட்பாளர்களாகக் களம் இறக்கப்பட உள்ளனர். அதிகாரப்பூர்வ அரசியல் கட்சித் தொடங்குவதற்கு முன்பாக, நிர்வாகிகளின் உள்ளூர் செல்வாக்கை மதிப்பீடு செய்யவும், இயக்கத்தின் வளர்ச்சியை விரிவுபடுத்தவும், அமைப்பின் அடித்தளத்தைப் பலப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து நற்பணி இயக்கத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவிக்கையில், “நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். நிர்வாகிகள் தங்களின் பகுதிக்கேற்ப சுயேச்சையாகப் போட்டியிடுவார்கள். தேர்தல் முடிவுகள் எதுவாகினும், அடிமட்ட அளவில் வலுவான நிர்வாகிகளை உருவாக்க இது உதவும்” என்று கூறியதாக டி.டி நெக்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியைத் தொடங்குவதற்கு முன்பாக, ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ 2021 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 169 போட்டியிட்டு 115 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ரசிகர் அமைப்பை எவ்வாறு தேர்தல் வெற்றியாக மாற்றலாம் என்பதையும், அடிமட்ட அளவிலான நிர்வாகிகளை எவ்வாறு தயார் செய்யலாம் என்பதையும் நிரூபித்தது. அதே பாணியை தற்போது தனுஷ் நற்பணி இயக்கமும் பின்பற்றுவதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
தமிழ்நாடு அரசியலில் பெண் வாக்காளர்களின் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், 18 முதல் 45 வயதுடைய பெண்களைக் கவர தனுஷ் நற்பணி இயக்கம் திட்டமிட்டுள்ளது. அண்மையில் சென்னையில் நடைபெற்ற மகளிர் அணி கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பெண்களை ஒருங்கிணைக்கும் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
சமீபகாலமாக தனுஷ் நற்பணி இயக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு மாற்றங்கள் தனுஷின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளன. வரும் 2028 இறுதியில் அல்லது 2029 தொடக்கத்தில், அடுத்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய கட்சி அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து நடிகர் தனுஷோ அல்லது அவரது இயக்கமோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





