--- --:--:-- --

இந்த தவெக அரசு ஒரு சோப்ளாங்கி அரசு.. சட்டம் ஒழுங்கை சீர்கெடுத்துவிட்டது – மு.க.ஸ்டாலின்

4

தவெக அரசு சட்டம் ஒழுங்கை சீர்கெடுத்துவிட்டது என்று முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.சட்டம் ஒழுங்கு தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து திமுக சார்பில் நாளை (அக்.31) மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொளியில், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை, விலைவாசி உயர்வைக் கண்டித்து நாளை (அக்.31) திமுக நடத்த உள்ள ஆர்ப்பாட்டம் என்பது, தவெக அரசுக்கான எச்சரிக்கை மணி. இதை Wake Up Call-ஆ எடுத்துட்டு முதலமைச்சர் விஜய் செயல்பட வேண்டும்.

 

 

சினிமாவில் ஹீரோவாக இருந்தவர், நிஜத்திலும் அப்படிதான் இருப்பார் என நினைத்து சில லட்சம் பேர் செய்த தவறால் ஒட்டுமொத்த மக்களையும் பாதித்து வருகிறது. தவெக தலைவர் விஜய், முதலமைச்சர் ஆவதற்கு முன் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, போதைப்பொருள் குறித்து பேசி பஞ்ச் டயலாக் பேசி ஆட்சிக்கு வந்தார். ஆட்சிக்கு வந்த பின் என்ன நிலைமை?. கொலை, கொள்ளை, கடத்தல் என எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கிறது.

 

 

குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட இந்த தவெக அரசு மீது பயமில்லை. கிரிமினல்கள் இதை அவர்களுக்கான ஆட்சியாக கொண்டாடுகிறார்கள். தலைநகரான சென்னையின் முக்கிய பகுதிகளில் கொலைகள் நடக்கிறது. ஜாமினில் வெளியே வரும் குற்றவாளிகள் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வரும்போதே ஓட ஓட விரட்டி கொலை செய்யப்படுகின்றனர்.

 

 

ஓட ஓட விரட்டிக் கொலை, சிறைக் கைதிகள் ஓட்டம், சிறுமிகள் மாயம், கொலை செய்துவிட்டு சாதாரணமா செல்லும் காட்சிகளை எல்லாம் முதலமைச்சர் பார்க்கிறாரா?. இல்லையா? இந்த செய்தி அவர் காதுக்கு போகுதா? இது எதுவுமே நடக்காத மாதிரிதான் அவரின் செயல்பாடு இருக்கிறது. அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தும் ஒரு ரெஸ்பான்ஸ் கூட இல்லை. யாராலும் அணுக முடியாத நிலையில் முதலமைச்சர் இருக்கிறார். காவல்துறைக்கு அமைச்சர் அவர் தான்.

 

எதற்கெடுத்தாலும் திமுக, திமுக என்று தான் சொல்கிறார்கள். ஆனால் பாதி குற்றங்களை செய்வது தவெக கட்சிக்காரர்கள் தான். பெண்களை தவெக காப்பாற்ற வேண்டாம். தவெக கிட்ட இருந்துதான் பெண்களை காப்பாற்ற வேண்டிய நிலை உள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எங்கேயும் போக வேண்டாம். தன்னோட கட்சியில் இருப்பவர்களை கட்டுப்படுத்தினாலே குற்றங்கள் பெருமளவில் குறையும்.

 

 

மெத் பூபாலன் என்ற ஒருத்தர் சில நாட்களுக்கு முன் ஒன்றிய அரசின் D.R.I. அமைப்பிடம் சிக்கினார். தமிழ்நாட்டை போதை உற்பத்தி மையமாக மாற்றி, உலகம் முழுக்க மெத் சப்ளை பண்ணுவதுதான் இவரின் வேலை. இவர் ஒரு த.வெ.க. நிர்வாகி. ஆனால், இந்த செய்தியை வெளியிட்டால் கொன்று விடுவோம் என த.வெ.க. ஒன்றிய செயலாளர் பத்திரிகைகாரர்களுக்கு ஃபோன் போட்டு மிரட்டுறார். இதுதான் தூய சக்தியா?.ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டினு முதலமைச்சர் விஜய் சொல்கிறார். உண்மையில எந்த ரெண்டுக்கு இடையில் போட்டி தெரியுமா?. மின்வெட்டு vs அரிவாள் வெட்டு, கரண்ட் பில் vs மளிகை பில்! விலை உயர்வு vs கொலை உயர்வு. இதுதான் தமிழ்நாட்டோட யதார்த்தம்.

 

 

மக்களுக்காகதான் நாங்கள் இருக்கோம். மக்களும் எங்களை நம்பித்தான் இருக்கிறார்கள். அதனால் தான் திமுக சார்பில் நடக்கவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் மூலமாக ஆளத் தெரியாத அரசுக்கு பாடம் புகட்டுவோம். சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி தவெக அரசு. முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்” என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon