டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் மாற்றம் செய்யட்டது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு என்றும், இதனை அரசியலாக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார்.
டெல்லியில் கடந்த சில தினங்களாக கலவரத் தீ பற்றி எரிகிறது.வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 32 பேர் வரை பலியாகியுள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை டெல்லி உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி முரளிதர் விசாரணை நடத்தி வந்தார்.
நேற்று நடத்திய விசாரணையில், கலவரத்தை கட்டுப்படுத்த டெல்லி காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்ததுடன், வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதியாதது ஏன்? என மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடமும் நீதிபதி முரளிதர் கடுமை காட்டினார்.
இந்நிலையில் நீதிபதி முரளிதரை, நேற்று இரவே பஞ்சாப் ம்ற்றும் அரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.
பாஜக தலைவர்களை பாதுகாக்கவே, வன்முறை வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் மாற்றப்பட்டுள்ளார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது.
இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிபதி முரளிதர் மாற்றம் என்பது உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையின் அடிப்படையில்தான் எடுக்கப்பட்டது.கடந்த, 12-ந்தேதியே எடுக்கப்பட்ட முடிவு இது. இதனை காங்கிரஸ் அரசியலாக்குவது நாகரீகமற்றது என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.