பியர் கிரில்ஸ் உடன் ரஜினி பங்கேற்ற “மேன் vs வைல்ட்” நிகழ்ச்சி..! டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் தேதி அறிவிப்பு!!

பிரபல சாகச நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் உடன் சூப்பர் ஸ்டார் ரஜினி பங்கேற்ற நிகழ்ச்சி, டிஸ்கவரி சேனலில் மார்ச் 23-ந் தேதி ஒளிபரப்பாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

மனித நடமாட்டம் இல்லாத அடர்ந்த காடு, மலைப் பகுதிகளில், பிரபலங்களை அழைத்துச் சென்று த்ரில் அனுபவங்களை தொகுத்து வழங்குவதில் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். கடந்தாண்டு பிரதமர் மோடியுடன் உத்தரகாண்டில் உள்ள ஒரு சரணாலயத்தில் படப்பிடிப்பு நடத்தி டிஸ்கவரி சேனலில் வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

அதே போன்ற வாய்ப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் கடந்த மாதம் கிடைத்தது. கர்நாடக மாநிலம் பந்திப்பூர் சரணாலயத்தில், “இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்” எனும் டிஸ்கவரி சேனலுக்கான நிகழ்ச்சி படப்பிடிப்பு நடைபெற்றது.இதில் ரஜினியும், பியர் கிரில்ஸ்சும் பங்கேற்றனர். ஒரு நாள் மட்டுமே இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. அடர்ந்த மலைப் பகுதியில் கரடு முரடான இடங்களில் சாகசம் செய்த ரஜினியின் உடலில் காயங்கள் கூட ஏற்பட்டதாக பரபரப்பு கிளம்பியது.

 

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி எப்போது டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என பெரும் எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி திரில் நிகழ்ச்சிகளை இடைவிடாது கண்டு களிக்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டம் சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில், நிகழ்ச்சி வெளியாகும் தேதியை டிஸ்கவரி சேனல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

அதில், பிரபல சாகச நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் உடன் அல்டிமேட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்ற திரில் காட்சிகளை வரும் மார்ச் 23-ந் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதை காண தயாராக இருங்கள் என டிஸ்கவரி சேனல் தரப்பில் உற்சாகமாக பதிவிடப்பட்டுள்ளது.


Leave a Reply