கோவை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நலப்பிரிவில் குழந்தைகளை கவரும் அழகிய கார்டூன் ஓவியங்கள் சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி சார்பில் மாணவர்களால் வரையப்பட்டு வருகிறது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
அதேபோல இந்த மருத்துவமனையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் நலப் பிரிவில் கோவை, திருப்பூர்,ஈரோடு, நீலகிரி,நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் சிகிச்சை பெற வருகின்றனர்.இப்படி சிறப்பு வாய்ந்த இந்த குழந்தைகள் நல மையத்தில் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் மனங்களையும், பெற்றோர்களின் மனங்களையும் கவரும் வகையில் தற்போது ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.
இந்த ஓவியத்தில் ” இயற்கையான சூழல்” “பசுமையை நோக்கி செல்வோம் ” என்ற கருத்து ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த ஓவியங்களை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் வரைந்து வருகின்றனர்.
மேலும்,இந்த ஓவியங்கள் குழந்தை நலப்பிரிவில் சுமார் 5 ஆயிரம் சதுர அடியில் மூன்று தளங்களில் வரைய உள்ளதாகவும், இந்த ஓவியங்கள் குழந்தைகளின் மனதை புத்துணர்வு ஆக்குவதுடன்,நோயின் தன்மையைக் குறைக்கும் எனவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் குழந்தைகள் நல பிரிவு தலைவர் பூமா, கிருஷ்ணா கல்லூரி மற்றும் யுவா பவுண்டேஷன் பொறுப்பாளர்கள் மாணவர்களின் ஓவியங்களை வாழ்த்தி ஊக்கப்படுத்தினர்.
மேலும் மருத்துவமனையில் உள்ள பெற்றோர்கள் மாணவ,மாணவிகளின் ஓவியங்கள் வாழ்த்தியதுடன்,அவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தனர்.