குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை பா.ஜ.க சார்பில் நாளை நடைபெறும் பேரணியின் போது வர்த்தக நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
“பிரியாணி குண்டா”வுடன் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த அவர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையரிடம் மனு அளித்தனர்.
பின்னர்,செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர்கள் டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்ற பெயரில் சங்பரிவார் அமைப்பினர் கலவரம் நடத்தியுள்ளனர் எனவும்,பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா டெல்லியில் நடந்தது போல் வண்ணாரபேட்டையிலும் நடக்கலாம் என தெரிவித்து இருப்பதாகவும், இந்நிலையில் கோவையிலும் பா.ஜ.க சார்பில் நாளை பேரணி நடைபெறுவதால் அச்சம் காரணமாக மனு கொடுக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும்,கடந்த காலங்களில் பேரணி என்ற பெயரில் வன்முறை நடைபெற்றதை போல இந்த பேரணியின் போதும் வன்முறை நடக்காமல் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் வலியுறுத்தினர்.