தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம்!
தமிழ்நாட்டில் மின்சார கட்டண நிர்ணயம், மின்வாரிய செயல்பாடு ஆகியவற்றை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கண்காணித்து வருகிறது. இந்த ஆணையமானது தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. இதில் இரு உறுப்பினர்களும் ஓய்வு பெற்றதால், கடந்த மார்ச்சில் இருந்து சட்ட உறுப்பினர் பதவி மற்றும் மற்றொரு உறுப்பினர் பதவி ஜூனில் இருந்து காலியாக உள்ளன.
கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், புதிய அரசு அறிவுறுத்தலின் அடிப்படையில், தலைவராக இருந்த மணிவண்ணன், ஜூன் இறுதியில் தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்த மூன்று பதவிகளுக்கும் புதியவர்களை தேர்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி டீக்கா ராமன் தலைமையில், தமிழக தலைமை செயலர், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் ஆகியோர் அடங்கிய தேர்வு குழுவை, கடந்த ஜூலையில் அரசு அமைத்தது.
இதையடுத்து, தேர்வு குழுக் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில், கடந்த 15-ம் நடந்தது. அதைத் தொடர்ந்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராதாகிருஷ்ணன், உறுப்பினராக மாஸ்கர்னஸ், சட்ட உறுப்பினராக முத்து சாரதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ராதாகிருஷ்ணன் மின் வாரிய முன்னாள் தலைவராகவும், மாஸ்கர்னஸ் மின் பகிர்மான கழக முன்னாள் இயக்குனராகவும் பணியாற்றியவர்கள். முத்து சாரதா, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஆவார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





