உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் : ஒத்தி வைக்கப்பட்ட பதவிகளுக்கு மார்ச் 4-ந் தேதி தேர்தல்..! தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்ட இடங்களுக்கு மார்ச் 4-ந் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு கடந்தாண்டு டிசம்பர் 27, 30 தேதிகளில் நடைபெற்றது. இதில் மாவட்ட, ஒன்றிய ஊராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் நேரடியாக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

 

தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர் துணைத் தலைவர், ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவியிடங்களுக்கு கடந்த மாதம் 11-ந் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் பல இடங்களில் ரகளையாலும், சில இடங்களில் வேறு பல காரணங்களாலும் தேர்தல் ரத்தாகி, ஜனவரி 30-ந் தேதி மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.

 

அப்போதும் சில இடங்களில் பல்வேறு காரணங்களால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி உள்ளிட்ட 102 பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த இடங்களுக்கு வரும் மார்ச் 4-ந் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Leave a Reply