--- --:--:-- --

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விவகாரம்..! நேரில் ஆஜராக ரஜினிக்கு விலக்கு அளித்தது விசாரணை ஆணையம்!!

Rajinikanth-

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் முன் நேரில் ஆஜராக வேண்டும் என நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், அவருக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

 

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஒண்டு மே மாதம் போராட்டங்கள் வெடித்தன இந்த போராட்டங்களில் போது வன்முறை ஏற்பட்டு போலீஸ் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

 

பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக 600க்கும் மேற்பட்டவர்களிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த சில நாட்களில் தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, இந்த போராட்டத்தில் விஷக்கிருமிகள், சமூக விரோதிகள் புகுந்துள்ளனர். இதனால் இந்த புனிதமான போராட்டம் கூட இரத்தக்களரியில் முடிவடைந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

 

இதனால் ரஜினியிடமும் விசாரணை நடத்த ஒரு நபர் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ரஜினி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் சம்மனில் கூறப்பட்டிருந்தது. ஆனால் ரஜினிகாந்த் தரப்பிலோ விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு கோரி ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் ரஜினியின் கோரிக்கையை அருணா ஜெகதீசன் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ரஜினியிடம் கேட்க வேண்டிய கேள்விகளை சீலிட்ட உறையில் வைத்து அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon