--- --:--:-- --

டெல்லியில் சிஏஏக்கு எதிராக போராடுபவர்கள் மீது வன்முறையை ஏவி விடுவதா..? திருப்பூரில் மறியலில் ஈடுபட்ட தமுமுகவினர் கைதாகி விடுதலை!!

1da55181-2d01-4e16-8ed4-aa020786c27c

டெல்லியின் ஷாகின் பாக் பகுதியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்தவர்களை கண்டித்து, த மு மு க வினர் திருப்பூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்  நடத்திய 100 பேர் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

 

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து நாட்டின் பல பகுதிகளில் மத்திய அரசை கண்டித்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் ஷாகின் பாக் என்ற பகுதியில் முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் கடந்த 2 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இவ்வாறு நடக்கும் போராட்டத்தை எந்த விதத்திலாவது தடுக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு உத்திகளை கையாண்டும் மக்கள் மசியவில்லை. தற்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

 

இதையடுத்து போராட்டம் நடக்கும் இடத்தில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு இருக்கும் நிலையில் போராட்டக்காரர்கள் இருக்கும் இடத்திற்கு வந்த, குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு எனக் கூறும் சில அமைப்பினர் பல இடங்களில் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பெரும் மோதல் வெடித்து வன்முறைக் களமாகியுள்ளது தலைநகர் டெல்லி . மேலும் துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர். இத்துடன் பல வீடுகள், கடைகள், வாகனங்களை தீவைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் டெல்லியில் பதற்றம் நீடிக்கிறது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து, கடந்த 3 நாட்களாக வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகள் வன்முறைக் களமாக மாறியுள்ளன. போராட்டக்காரர்களுக்கு எதிராக மற்றொரு தரப்பினர் ஆவேசம் காட்ட நேற்றும் மோதல் வெடித்தது. கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு வன்முறை வெடிக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் மேலும் அதிகரித்தது. இதில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் பொதுமக்கள் தரப்பிலும் 8பேர் பலியாகி, பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த வன்முறை சம்பவங்களை மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கில் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் உள்பட கட்சி பாகுபாடின்றி அனைத்து தலைவர்களும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

டெல்லி, ஷாகின் பாக் பகுதியில் அமைதியாக நடந்த போராட்டத்தை தடுக்கும் வகையில் போராட்டம் செய்பவர்கள் மீது கல்வீசியும், துப்பாக்கியால் சுட்டும், தீவைப்பு, வாகன எரிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் சில  அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருப்பூரில் திடீர் ரயில் மறியல் போராட்டம் செய்ய முடிவு செய்தனர்.

 

நேற்று காலை 11 மணிக்கு த மு மு கழகத்தின் மாவட்ட தலைவர் நஸ்ருதீன் தலைமையில் செயலாளர் செரங்காடு அப்பாஸ், பொருளாளர் காஜா மைதீன், மாவட்ட துணைத் தலைவர் சித்தீக், துணை செயலாளர்கள் சபீருதீன், ஹாரூன்,  மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அபுசாலி, துணை செயலாளர் சலீம்,சமூக நீதி  மாணவர் இயக்கம் மாவட்ட செயலாளர் ஷேக் முஹம்மது, துணை செயலாளர் ஆஷிக் உள்பட 100க்கும் மேற்பட்டோர் காதர்பேட்டை பகுதியில் ஒன்று கூடினர்.

பின்னர் அங்கிருந்து கட்சி கொடியை ஏந்தி கோஷமிட்டவாறு திருப்பூர் இரயில் நிலையத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர். ஆனால் போலீசார் ரயில் நிலையத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்புக்கு நின்றனர். இதையடுத்து ஊர்வலமாக வந்தவர்கள் தலைமை தபால் நிலையத்திற்கு சென்றனர். அங்கு குறைந்த அளவிலேயே போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட த.மு.மு.க வினர் தலைமை தபால் நிலைய வளாகத்திற்குள் சென்று உட்கார்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். சுதாகரித்த போலீசார் உடனே அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, தலைமை தபால் நிலைய கேட்டை இழுத்து மூடி பூட்டு போட்டனர்.

 

இதையடுத்து த மு மு க வினர் தபால் நிலையம் முன்பு ரோட்டில் உட்கார முயற்சித்தனர். போலீசார் தடுக்கவே  பின்னர் 3 பகுதியாக பிரிந்து ரயில் நிலையம் முன்பும், மேம்பாலத்தின் மீது ஏறும், இறங்கும் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்து திருப்பூர் சேம்பர் ஆப் காமர்ஸ் ஹாலில் தங்க வைத்தனர். பின்னர் மாலை 4 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon