நிர்பயா பாலியல் படுகொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன், சிறை சுவற்றில் தலையை மோதி காயப்படுத்திய சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூக்குத்தண்டனையை தாமதப்படுத்தவே, திட்டமிட்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவை பாலியல் கொடுமை செய்து படுகொலை செய்த குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக்கு எதிரான அப்பீல் தள்ளுபடி , கருணை மனு நிராகரிப்பு என அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து கடந்த மாதமே தூக்குத் தண்டனையை நிறைவேற்றுதற்கான தேதியும் குறிக்கப்பட்டது.
ஆனால் தூக்குத் தண்டனையை காலதாமதப்படுத்த இந்தக் கொலையாளிகள், வீம்புக்காகவே மேல் முறையீடு, அப்பீல் என ஒருவர் பின் ஒருவராக புதுப் புது நாடகங்களை அரங்கேற்றியதால் இரண்டு முறை தூக்கு தேதி தள்ளிப்போனது. கடைசியில் மார்ச் 1-ந் தேதி 4 பேரையும் தூக்கிலிட தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொலையாளிகளில் ஒருவனான வினய் என்பவன் தலையில் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவன், சிறையின் சுவற்றில் வேண்டுமென்றே மோதி தலையில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டதாகவும், தூக்குத்தண்டனையை மேலும் தாமதப்படுத்தவே திட்டமிட்டு இந்த நாடகத்தை அவன் அரங்கேற்றியுள்ளதாகவும் திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலையில் பலத்த காயமடைந்துள்ள வினய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மார்ச் 1-ந் தேதிக்குள் காயம் ஆறாவிட்டால் அவனை தூக்கில் போட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மற்ற 3 பேருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றவும் முடியாது. ஏனெனில் 4 பேரையும் ஒரே நாளில் தூக்கில் போட வேண்டும் என்பது தான் தீர்ப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.