அவிநாசி அருகே விபத்தில் 20 பேர் பலியான சோகம்..! சம்பவ இடத்திற்கு விரைந்த கேரள அமைச்சர்கள்,எம்.பி, அதிகாரிகள்!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே கேரள அரசுப் பேருந்து மீது கன்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் 5 பெண்கள் உட்பட 20 பேர் பலியான கோர விபத்து சம்பவம் பற்றிய தகவல் அறிந்த கேரள அமைச்சர்கள் இருவரும், ஒரு எம்பியும், அதிகாரிகள் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

 

கேரள அரசுக்கு சொந்தமான சொகுசுப் பேருந்து ஒன்று 49 பயணிகளுடன் பெங்களூருவில் இருந்து ஆலப்புழைக்கு நேற்றிரவு புறப்பட்டு சேலம் – கோவை சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 3 மணியளவில் அவிநாசி அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, எதிரே சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த டைல்ஸ் ஏற்றிய கன்டெய்னர் லாரி ஒன்று அதிவேகத்தில் மோதியது. இதில் பேருந்து சின்னாபின்னமாகி, பயணிகள் இடிபாடுகளில் சிக்கி பரிதவித்தனர்.

அக்கம் பக்கம் உள்ளவர்களும், தீயணைப்பு படையினரும் 5 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக போராடி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் பேருந்துக்குள்ளேயே 3 பெண்கள் உட்பட 10 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். எஞ்சிய 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் மேலும் 10 பேர் உயிரிழக்க பலி எண்ணிக்கை 20 ஆனது. இன்னும் சிலர் உயிருக்கு போராடி வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

 

இந்த பலியான மற்றும் காயமடைந்த அனைவருமே கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம் கொச்சி, பாலக்காடு, திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் பலியானவர்களின் உடல்கள் மோசமாக சிதைந்துள்ளதால் அடையாளம் காண்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்தக் கோர விபத்து பற்றிய தகவல் கிடைத்தவுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமைச்சர்கள் சுசீந்திரன், சிவக்குமார் மற்றும் உயர் அதிகாரிகளை விரைந்து செல்ல உத்தரவிட்டார். மேலும் மருத்துவக் குழுவினரையும் விரைந்து செல்ல உத்தரவிட்டார். பாலக்காடு மாவட்ட எஸ்.பி. தலைமையிலும் கேரள காவல்துறை அதிகாரிகளும் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தனர். இதேபோல் கோவையில் உள்ள கேரளா கிளப் உறுப்பினர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

கேரள அமைச்சர் களம், அதிகாரிகளும்,விபத்தில் பலியானவர்களின் சடலங்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அத்துடன் காயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களையும் மேல் சிகிச்சைக்காக கேரளா கொண்டு செல்லவும் அம்மாநில அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனும் விபத்து பகுதியை பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். அத்துடன் காயம் பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் உதவிகள் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Leave a Reply