அமித்ஷாவுடன் கெஜ்ரிவால் சந்திப்பு..! டெல்லி மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசுடன் இணைந்து செயல்பட முடிவு!!

டெல்லி முதல்வராக 3-வது முறை பதவியேற்ற பின், முதல் முறையாக உள்துறை அமைச்சர் அமித்ஷா வை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்தார். டெல்லி மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது குறித்து கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார் என்று கூறப்படுகிறது.

 

டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று அர்விந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக முதல்வராக கடந்த வாரம் பதவியேற்றார். கடந்த 5 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு கெஜ்ரிவாலுக்கு ஏகப்பட்ட குடைச்சலை கொடுத்தது. இதனால் மத்திய அரசுடனும், டெல்லி துணை நிலை ஆளுநருடனும் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டிய நிலைக்கு கெஜ்ரிவால் தள்ளப்பட்டார். ஆனாலும் அடிப்படை மக்கள் நலத்திட்டங்களை திறம்பட செயல் படுத்தியதால் அவரை மீண்டும் டெல்லியின் மைந்தனாக்கி அழகு பார்த்துள்ளனர் தலைநகர் வாசிகள் .

 

இந்த முறை டெல்லி முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவருடைய இல்லத்தில் கெஜ்ரிவால் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். டெல்லியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். டெல்லிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கெஜ்ரிவால் முன்வைத்ததாக கூறப்படுகிறது.

 

இதற்கிடையே புதிய அரசு அமைந்த பின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


Leave a Reply