துறைமுக அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அவரது பதிவை பார்த்த ரமேஷ் என்ற இளைஞர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தொடர்பு கொண்டுள்ளார்.
துறைமுக அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த இளைஞர் மறுமணம் செய்து கொள்வது தான் தனது லட்சியம் என புரட்சிகரமாக பேசியுள்ளார். ரமேஷின் வார்த்தைகளை நம்பிய பெண்ணின் பெற்றோர் கடந்த அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்ததாக கூறப்படுகிறது. வரதட்சணையாக 25 சவரன் நகையும், ஒரு லட்சம் ரூபாய் பணமும் பேசப்பட்டதாக தெரிகிறது.
பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கான அழைப்பிதழ்களை வழங்கி வந்தனர். இந்த நிலையில் ரமேஷ் வரதட்சணையாக வாங்கி வைத்திருந்த 25 சவரன் நகை, ஒரு லட்சம் ரொக்கத்தையும் எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதன் பின்னரே ரமேஷ் மோசடி செய்துள்ளதை பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பு உணர்ந்துள்ளது.
இதையடுத்து பெண்ணின் பெற்றோர் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினரின் விசாரணையில் ரமேஷ் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. புரட்சிகரமான வார்த்தைகளால் பெண் வீட்டாரை மயக்கிய ரமேஷ் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தை என்பது தெரியவந்துள்ளது.
முதல் திருமணத்தின் போதும் தம்மை அரசு அதிகாரி எனக் கூறி தான் மோசடி செய்துள்ளார் ரமேஷ். ஆனால் திருமணத்திற்குப் பின் அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்ததோடு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார். தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர் திருநன்றை என்னும் ஊரில் மறைந்திருந்த ரமேஷை கைது செய்தனர். அவரிடமிருந்து 20 சவரன் நகைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.