தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அவசரமாக கூடுகிறது. சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பாக கொள்கை முடிவு எடுத்து இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.
ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை, டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தும் திட்டங்களுக்கு விவசாயிகள் தரப்பில் மட்டுமின்றி பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.
இதையடுத்து டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அத்துடன் இது தொடர்பாக மத்திய அமைச்சர்களுக்கும் தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன.
இதையடுத்து, தற்போது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடை பெற்று வரும் நிலையில், நாளை மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு பற்றி கொள்கை முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான சட்ட முன்வடிவை பேரவையில் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலும், அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்றவற்றுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்தச் சட்டத்திற்கு இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளது. எனவே இது குறித்தும் மற்றும் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. எனவே நாளைய அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.