--- --:--:-- --

எப்போதாவது மாடுபிடித்தாரா ஓபிஎஸ்..? ஜல்லிக்கட்டு நாயகன் பட்டம் ஏன்..? சட்டசபையில் கிண்டலடித்த துரைமுருகன்!!

11

துணை முதல்வர் ஓபிஎஸ்சை ஜல்லிக்கட்டு நாயகன் என்கிறீர்களே? என்றாவது அவர் ஜல்லிக்கட்டு காளையை பிடித்துள்ளாரா? என எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கரோ, ஜல்லிக்கட்டுக்கு நீங்கள் தயாரா? என பதிலளிக்க, சபையில் சிரிப்பலை எழுந்தது.

 

விலங்குகள் நல வாரியத்தின் வழக்கால் ஜல்லிக்கட்டுக்கு திடீர் தடை போட்டது உச்ச நீதிமன்றம் . இதனால் கடந்த 2017 ஜனவரியில் தமிழகம் மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் ஒட்டு மொத்தமாக ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க எழுச்சிமிகு போராட்டம் நடத்தினர்.

 

அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜல்லிக்கட்டுக்காக அறவழியில் நடந்த போராட்டத்தின் எழுச்சியைக் கண்ட ஓபிஎஸ், ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு அனுமதி வழங்க, சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றினார். இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு சாத்தியமானது. ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்க காரணமான ஓபிஎஸ்சுக்கு, ஜல்லிக்கட்டு நாயகன் என்ற பட்டமும், புகழும் தானாக வந்து சேர்ந்தது.

தற்போது சட்டப்பேரவையில் பட்ஜட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நிதியமைச்சர் பொறுப்பு வகிப்பதால் பட்ஜெட்டின் கதாநாயகனும் துணை முதல்வர் ஓபிஎஸ் தான். இதனால் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கும் அவர்தான் பதிலளித்து வருகிறார். பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் பலரும், ஓபிஎஸ் மனம் குளிரச் செய்யும் வகையில், அவரை ஜல்லிக்கட்டு நாயகன் என்று வார்த்தைக்கு வார்த்தை புகழ்கின்றனர்.

 

இப்படி ஓபிஎஸ்சை புகழ்வது, எதிர்க்கட்சி துணைத் தலைவரான துரைமுருகனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது போலும். ஏற்கனவே நக்கல், நையாண்டி செய்வதில் துரைமுருகனை மிஞ்ச யாரும் கிடையாது எனலாம். எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலம் முதலே கிட்டத்தட்ட 50 ஆண்டுகால சட்டப் பேரவை அனுபவம் மிக்க துரைமுருகன், அவ்வப்போது சபையில் ஏதாவது ஜோக் அடித்து சிரிப்பலை எழச் செய்வதும் வழக்கம்.

 

அப்படித்தான் இன்று, அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் ஓபிஎஸ்சை ஜல்லிக்கட்டு நாயகன் என்கிறீர்களே? எப்போதாவது அவர் மாட்டைப் பிடித்தாரா? அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அழைத்துச் சென்று காளையை அடக்கச் செய்வீர்களா? என்று கிண்டலடித்தார். இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரோ , ஜல்லிக்கட்டுக்காக சிறப்பு அனுமதியை பெற்றுத் தந்ததால் ஜல்லிக்கட்டு நாயகன் என்கிறோம். எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் விரும்பினால் விராலிமலை ஜல்லிக்கட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். துரைமுருகன் பார்வையாளராக வந்தாலும் சரி, மாடுபிடி வீரராக வந்தாலும் சரி மகிழ்ச்சி தான் என்றார். துரைமுருகனுக்கு ஜல்லிக்கட்டுக்கு வர அமைச்சர் அழைப்பு விட பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon