--- --:--:-- --

அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்கீடு.போராட்டக்குழு வரவேற்பு !!!

8

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை உள்ளது.அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி.மழைக்காலங்களில் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு பவானிசாகர் அணைக்கு அனுப்பப்படுகிறது.

 

கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான இந்த பில்லூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரானது இறுதியாக பல்லாயிரக்கணக்கான லிட்டர் நீர் கடலில் கலந்து வீணாகி வருகிறது.

 

இதனை கருத்தில் கொண்டு பில்லூர் அணையின் கீழ் பகுதியில் உள்ள அத்திக்கடவு என்ற பகுதியில் இருந்து அவினாசி வரை உள்ள குளம்,குட்டைகளை வெளியேற்றப்படும் உபரி நீரைக்கொண்டு நிரப்பி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் அவினாசி – அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை செயல்படுத்த கோரி கோவை,திருப்பூர் மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.இதனை அரசு செவி மடுக்கவில்லை.

பொறுத்துப்பார்த்த மக்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவினாசி – அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி எலச்சிபாளையம் பிரபாகரன்,வெள்ளியங்கிரி உட்பட10 க்கும் மேற்பட்டோர் 12 நாட்கள் நடத்திய தொடர் உண்ணாவிரத போராட்டம் காரணமாகவும்,எதிர்க்கட்சியினரின் அழுத்தத்தினாலும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அவினாசி – அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படும் எனவும் ,திட்டத்திற்கான முதற்கட்ட பணிகளுக்காக ரூ.3.25 கோடி ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியிட்டார்.இதனையடுத்து போராட்டக்குழுவினர் 12 நாட்கள் நடைபெற்ற தங்களது தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.இத்திட்டத்திற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டன.

 

மேலும்,தமிழக அரசும் கடந்த பட்ஜெட்டில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்தும் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தமிழக அரசு இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இத்திட்டத்திற்காக மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

 

இதுகுறித்து அவினாசி – அத்திக்கடவு திட்ட போராட்டக்குழுவை சேர்ந்த எலச்சிபாளையம் பிரபாகரன் கூறுகையில் தமிழக அரசு அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்காக மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும்,இத்திட்டத்தை அரசு விரைவில் முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

 

மேலும்,அத்திக்கடவு பகுதியில் இருந்து இத்திட்டத்தை துவக்கினால் தங்களது விவசாயம் பாதிக்கப்படும் என பவானிசாகர் விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும்,இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறையினரிடம் அனுமதி பெற்றால் மட்டுமே அத்திக்கடவு பகுதியில் இருந்து இத்திடத்தை துவக்க இயலும் எனவும் தெரிவித்தார்.மேலும்,மழைக்காலங்களில் நிரம்பி பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் பொழுதும்,கோவை திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்படுவதாம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதா ? என்ற நம் குற்றம் குற்றமே செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர் நிச்சயமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு கிடையாது எனவும்,அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தியது போக எஞ்சியுள்ள தண்ணீரை மட்டுமே இத்திட்டத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon