ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் அதிரடி திருப்பமாக வழக்கையே முடித்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம் .
சபாநாயகர் தரப்பின் விளக்கத்தை ஏற்று, சபாநாயகர் தான் இதில் முடிவெடுக்க முடியும்; உச்சநீதி மன்றம் உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என வழக்கை முடித்து வைத்ததால் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ், இபிஎஸ் என அணிகள் உருவானது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக, அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் இபிஎஸ்சுக்கு எதிராக வாக்களித்தனர்.
பின்னர் இரு அணிகளும் ஒன்றாகி விட்டாலும், இபிஎஸ்சுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் தரப்புக்கு, திமுக தரப்பில் இருந்து சிக்கல் ஏற்பட்டது. அதிமுக எம்எல்ஏக்கள் என்று கூறிக்கொண்டு, அக்கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் திமுக தரப்பில் அக்கட்சியின் கொறடா சக்ரபாணி மனு கொடுத்தார். ஆனால் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இதனால் உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த நிலையில், திடீரென கடந்த மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, சபாநாயகர் முடிவெடுப்பதில் இவ்வளவு காலம் தாமதம் ஏன் என்று கேள்வி எழுப்பி, பதிலளிக்குமாறு சட்டப்பேரவை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதன் மீது முடிவெடுப்பது சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என தெரிவித்தார்.
.
இதனால் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதத்தை ஏற்றுக் கொள்வதாகவும், சபாநாயகர் அவரது அதிகாரத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகவும் கூறி வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், 11பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கால வரம்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற திமுக தரப்பு கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என நிராகரித்தது. இதனால் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.