குப்பையை கொட்டினா 1000! அதை போட்டுக்கொடுத்தா 500! ஊராட்சித்தலைவரின் வினோத அறிவிப்பு !!!

கோவை மாவட்டம் சூலூ ரை அடுத்துள்ள முத்து கவுண்டன்புதூர் ஊராட்சி மன்ற தலைவராக அ.தி.மு.க-வை சேர்ந்த கந்தவேல் என்பவர் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தங்களுடைய ஊராட்சி பகுதிகளில் எவ்வாறு சுத்தமாக வைப்பது என உறுப்பினர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து ஊராட்சி பகுதிகளில் குப்பை கொட்டும் இடங்களை தேர்வு செய்யப்பட்டு அந்த பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

 

அந்த பிளக்ஸ் பேனரில கோவிலை சுத்தமாக வைத்து புண்ணியம் அடைவதைப் போல, ஊரை சுத்தமாக வைத்து புண்ணியம் அடைவது நமது கடமை என்றும்,ஊராட்சி பகுதியை சுத்தமாக வைக்கும் கடமையை மீறுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து ஊராட்சிக்கு தலைவருக்கு அனுப்பினால் அந்த நபர்களுக்கு 500 ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊராட்சி மன்றத்தின் இந்த முடிவு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும்,இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் கூறுகையில் பொதுமக்களிடம் அபராதம் விதிப்பது என்பது ஒரு உணர்வை ஏற்படுத்தும் எனவும், மக்கள் பொது இடங்களில் யாரும் குப்பை கொட்ட கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும்,இதன் காரணமாக தங்களுடைய ஊராட்சி சுத்தமாக மாறும் என நம்பிக்கை தெரிவித்த அவர் தங்கள் பகுதியை சுத்தமாக வைத்து அதில் ஊராட்சிமன்ற நிர்வாகத்துடன், மக்களும் இணைந்து பணியாற்றுவதால் விரைவில் குப்பைகளற்ற ஊராட்சியாக முத்து கவுண்டன்புதூர் ஊராட்சி மாறும் என கூறிய அவர் தமிழக அரசின் ஒத்துழைப்போடு ஊராட்சிக்கு பல்வேறு நலத் திட்டங்களையும் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் முதலில் தங்கள் ஊரில் பல இடங்களில் பொதுமக்கள் குப்பை கொட்டி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்த பிறகு பொது இடங்களில் குப்பை கொட்டுவது குறைந்துள்ளது எனவும்,வீடுகள் முன்பு பொது இடங்களில் குப்பை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய்களும் ஏற்படும் சூழல் இருந்தது.இந்நிலையில் ஊராட்சி மன்றத்தின் இந்த அறிவிப்பின் காரணமாக தற்போது யாரும் பொது இடங்களில் குப்பை கொட்டுவதில்லை எனவும்,ஊராட்சி மன்ற தலைவரின் இந்த முடிவு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply