அமைச்சர் சீனிவாசன் விவகாரம் : தேசிய பழங்குடிகள் ஆணையம் நோட்டீஸ்
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோரி அளிக்கப்பட்ட புகார் மீது விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய பழங்குடிகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு அண்மையில் சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது காலணியை கழற்றுமாறு பழங்குடியின சிறுவன் ஒருவனை கேட்டுக்கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சமூக நீதி கட்சி தலைவர் பன்னீர் செல்வமும், பழங்குடியின அமைப்பை சேர்ந்த சோபா மதன் என்பவரும் அளித்த புகாரின் பேரில் தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு தேசிய பழங்குடிகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தேசிய பழங்குடிகள் ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




