மாசி மாத பூஜைகளுக்காக வரும் 13 ஆம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி மாசி மாத பூஜைகளுக்காக வரும் வியாழக்கிழமை ஐயப்பன் கோவில் சன்னிதானத்திற்கான நடை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்ட இருக்கிறார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது .
பக்தர்கள் தரிசனத்திற்கு பின் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். மறுநாள் 14ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். பிப்ரவரி 18ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும்.