டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி டெல்லி மக்களின் தேவையை சிறப்பாக நிறைவேற்ற வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல கெஜ்ரிவாலை டுவிட்டரில் வாழ்த்து யுள்ள பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா எதிர்க்கட்சியாக இருந்து மக்கள் நலத் திட்டங்களுக்காக பாஜக குரல் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
இதேபோல் டெல்லி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மகத்தான வெற்றி பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.
வளர்ச்சி திட்டங்கள் மூலம் தான் மக்களின் மனங்களை வெல்ல முடியும் என்பதை கெஜ்ரிவாலின் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்த மம்தா பானர்ஜி, சிஏஏ ,என் ஆர் சி ,என்பிஆர் ஆகியவற்றை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதையே தேர்தல் முடிவு காட்டுவதாகக் குறிப்பிட்டார். இதே போல் கெஜ்ரிவாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின் வகுப்புவாத அரசியலை வளர்ச்சித் திட்டங்கள் முறியடிக்கும் என்பதற்கு இந்த தேர்தல் முடிவுகளே உதாரணம் என தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.