ரஜினியுடன் கூட்டணிப் பேச்சு எதுவும் ‘இதுவரை’ நடத்தவில்லை..! அப்ப ‘இனிமேல்’ உண்டா..? பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சூசகம்!!
ரஜினியுடன் கூட்டணி வைப்பது குறித்து இதுவரை எந்தப் பேச்சும் நடத்தவில்லை. முதலில் ரஜினி கட்சி தொடங்கட்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ள நிலையில் இனிமேல் கூட்டணி பேச்சு நடக்கலாமோ? என்ற கேள்வி எழுந்து பரபரப்பாகியுள்ளது.
ரஜினி கட்சி தொடங்குவது பற்றியும், ரஜினியுடன் கூட்டணியில் பாமக சேரும் எனவும் தமிழருவி மணியன் கூறியது பெரும் சர்ச்சையானது.தமிழருவி மணியனின் இந்தக் கருத்தால் தமிழக அரசியலில் ஒரே நாளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு அப்படியே பொசுக் என அமுங்கியும் விட்டது.
இதற்கு காரணம், ரஜினி அறிவிக்காமல், தமிழருவி மணியன் எவ்வாறு இப்படியெல்லாம் அறிவிக்கலாம் என ரஜினி தரப்பிலேயே அதிருப்தி எழுந்ததாகக் கூறப்பட்டது. மேலும் பாமக தரப்பும் எதிர் ரியாக்ஷன் காட்டியது.
அதைவிட டிடிவி தினகரனின் அமமுகவுடன் ரஜினி கூட்டணி வைக்க விரும்ப மாட்டார் எனக் கூறியதற்கு, தமிழருவி மணியனை விளாசித் தள்ளினார் அமமுக பொருளாளர் வெற்றிவேல்.
இதனால் நொந்து போன தமிழருவி மணியன், நான் ரஜினி பற்றி கட்சி ஆரம்பிக்கலாம்.. இன்னாருடன் கூட்டணி இருக்கலாம்.. என பொத்தாம் பொதுவாக யூகமாகத் தான் கூறினேன். இனிமேல் ரஜினி பற்றி வாய் திறக்க மாட்டேன் எனக் கூறி தமிழருவி மணியன் பின் வாங்கி விட்டார்.
இந்நிலையில் பாமக சார்பில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் நிழல் நிதி அறிக்கையை அக் கட்சி நிறுவனர் டாக்டர் . ராமதாஸ் இன்று சென்னையில் வெளியிட்டார். அப்போது 2021 சட்டப்பேரவை தேர்தலில் ரஜினியுடன் பாமக கூட்டணி வைக்குமா ?என்று கேட்டதற்கு, ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்.
கூட்டணி குறித்து ரஜினியுடன் இதுவரை எந்தப் பேச்சும் நடத்தவில்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். ரஜினியுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று கூறாமல் இதுவரை பேசவில்லை என்று டாக்டர் ராமதாஸ் சூசக மாக கூறியிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.





