கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 61வது வார்டு ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை பல ஆண்டுகளாக மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சர்வீஸ் சாலையில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டும்,சாலை கழிவுகள் கொட்டப்பட்டும் தேங்கி கிடக்கின்றது.
இதுதொடர்பாக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் பலமுறை அதிகாரிகளிடத்தில் மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த மோசமான சர்வீஸ் சாலைகளை ஆய்வு செய்த நா.கார்த்திக் எம்.எல்.ஏ, கோவை மத்திய சிறை முன்பு உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தங்கராஜ், கோட்ட கணக்காளர் பீரான் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் 10 நாட்களுக்குள் பராமரிப்பு பணி மேற்கொள்வதாகவும், புதிய சாலை நிதி தாமதம் ஆனதால் கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் பேசி நிதி பெற்று பணியை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தர்ணா போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சாலையை முறையாக செப்பனிட பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலைத்துறையினரை கண்டித்து தி.மு.க எம்.எல்.ஏ திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.