ராமேஸ்வரம் காட்டுப்பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மலைராஜன், (55). கூலித்தொழிலாளி. இவரது மகன் இளையராஜா(7). அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். மலைராஜன் குடும்பத்துடன் சுடுகாட்டன்பட்டியில் வசித்து வந்தார். மலைராஜனுக்கும், அவரது மனைவி மாரீஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதனால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் மலைராஜன், மகன் இளையராஜாவையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கமாம். உறவினர்கள் வீட்டில் ஒரு சில நாட்கள் தங்கி விட்டு மீண்டும் வீடு திரும்புவாராம்.
இந்நிலையில், மனைவியிடன் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் மகனுடன், மலைராஜன் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் இருவரின் உடல்கள் சுடுகாட்டம்பட்டி தரவை அருகே தண்ணீரில் கிடந்தன. இது குறித்து தகவலறிந்த ராமேஸ்வரம் நகர் போலீசார், இருவரின் உடல்களை மீட்டனர். இறப்பிற்கான காரணம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.