கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி அருகே உள்ள குருந்தமலை அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி தைப்பூசத்திருத்தேர் பெருந்திருவிழா கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனை தொடர்ந்து மூலவர் அபிஷேகம்,உற்சவர் மலை வலம் வருதல்,மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களும்,ஆராதனைகளும் நடைபெற்றன.
விழாவின் மற்றுமொரு அங்கமான திருக்கல்யாண உற்சவமும்,முருகன்,வள்ளி,தெய்வானை சமேதராய் சிறப்பாக நடைபெற்றது.அதனை தொடர்ந்து உற்சவர் யானை வாகனத்தில் மலை வலம் வருதல் நிகழ்வும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து தைப்பூசத்திருத்தேர் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ” திருத்தேர் வடம் பிடித்தல் ” நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ” அரோகரா அரோகரா ” கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.அப்போது, ” அரோகரா அரோகரா ” கோஷம் விண்ணை பிளந்த படி இருந்தது.
தைப்பூசத்தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி மற்றும் பால் குடங்களை சுமந்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து இன்றும் கா.புங்கம்பாளையம் ஊர்ப்பொது மக்கள் சார்பாக பால்குடங்களை அங்கிருந்து கோவில் வரை 150 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களது தலையில் சுமந்த படி பாதையாத்திரையாக வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி மணி தலைமையில் காவல் துறையினரும்,ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விழாவில் கோவை,நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாதையாத்திரையாகவும் பக்தர்கள் வந்திருந்தனர். நீலகிரி,கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முருகனை தரிசனம் செய்வதற்காக வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வசதிக்காக கோவை, காரமடை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தினரால் சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இருந்தும் பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பக்தர்களுக்காக ஆங்காங்கே தன்னார்வலர்களும்,பொதுமக்களும் இணைந்து அன்னதானம்,குடிநீர் உள்ளிட்டவற்றை பக்தர்களுக்கு இலவசமாக வழங்கினர்.