ராகுல் டிராவிட் ‘பந்து’ வீச…’பேட்’ செய்த முதல்வர் எடப்பாடி..! கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவில் ருசிகர விளையாட்டு!!

சேலம் அருகே சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட் பிடித்து விளையாட அவருக்கு, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பந்து வீசினார்.

 

சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் வாழப்பாடி அருகே சர்வதேச தரத்தில் பிரமாண்ட கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. 16 ஏக்கர் பரப்பளவில் ரூ 8 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பங்கேற்றார்.

விழாவில் பேசிய ராகுல் டிராவிட், சேலத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் சிறிய நகரங்கள், கிராமங்களில் இருந்துதான் வரவுள்ளார்கள். எனவே இப்பகுதி கிராமப்புற இளைஞர்களுக்கு இந்த மைதானம் வரப்பிரசாதம். இந்த மைதானத்தில் என்னால் விளையாட முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது என டிராவிட் பேசினார்.

 

இந்த விழாவில் பேசிய இந்திய கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர் சீனிவாசன், இந்த மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும். தல தோனியும் விளையாட வருவார் எனத் தெரிவித்தார். திறப்பு விழா முடிந்தவுடன் மைதானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் சுற்றிப் பார்த்தனர். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட் பிடித்து விளையாட்டுக்கு விளையாட விரும்ப, அவருக்கு ராகுல் டிராவிட் பந்து வீசியது சுவாரஸ்யமானது.


Leave a Reply