டாஸ்மாக் சரக்குகளின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால், குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசுக்கோ ஆண்டுக்கு ரூ. 3100 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்ற புள்ளி விபரத்தை அறிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு வருவாயை வாரி வழங்கும் காமதேனுவாக டாஸ்மாக் விளங்குகிறது. அரசே மதுபானங்களை விற்பதால், டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டுகிறது. அரசின் வரவு – செலவு திட்டமே டாஸ்மாக் வருவாயை நம்பித்தான் உள்ளது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடை என்ற ரீதியில் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்க, தமிழகத்தின் குடிமகன்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்து விட்டது.
இதனால் நடுத்தர, அடிமட்டத்தில் உள்ள குடிமகன்கள், தங்கள் வருவாயில் பெரும் பகுதியை டாஸ்மாக்கில் குடித்து தொலைத்து விட்டு வாழ்க்கையையே தள்ளாட்டம் போடச் செய்யும் நிலை உள்ளது.
இந்நிலையில், சரக்குகளின் விலையை திடீரென உயர்த்தியுள்ளது. குவார்ட்டருக்கு ரூ.10,ஆஃப் பாட்டிலுக்கு ரூ.20, ஃபுல் பாட்டிலுக்கு ரூ.40 என விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பீரின் விலையும் ரூ.10 உயர்த்தப்பட்டு இன்று முதலே விலை உயர்வு அமல்படுத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2017-ல் கடைசியாக டாஸ்மாக் சரக்கு விலை உயர்த்தப்பட்ட பின், 3 ஆண்டுகள் கழித்து விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ 3100 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால் தினசரி குவார்ட்டர் குடிக்கும் குடிமகன்களின் கணக்கிலோ, ஆண்டுக்கு கூடுதலாக 3650 ரூபாய் செலவு எகிறுகிறதே என புலம்பல் சத்தம் கூடுதலாகியுள்ளது.